பயிற்சியாளரின் பங்கு – திறமையை வளர்ப்பதா அல்லது அழிப்பதா? கம்பீர் செய்கிற செயல்கள் என்ன?
வங்கதேசத்துக்கு எதிரான ஆசியக் கோப்பை போட்டியில் தடுமாறியும் இந்திய அணி வெற்றி பெற்று இறுதிக்கு சென்றது. ஆனால், அணித் தேர்வில் அடிக்கடி நிகழும் பேட்டிங் வரிசை மாற்றங்கள் அனைத்தும் கவுதம் கம்பீரின் முடிவுகள் குறித்த கடும் விமர்சனங்களை தூண்டியுள்ளது.
இந்திய அணியின் வெள்ளைப்பந்து போட்டிகளில் முக்கியமான பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங். தனித்திறமையால் முன்னேறிய அவர் இல்லாமல் டி20 போட்டிகளை நினைக்க முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால், “சூப்பர் ஸ்டார் கலாச்சாரத்தை” முறியடிக்க வந்ததாகச் சொல்லப்பட்ட கம்பீரே, அந்தக் கலாச்சாரத்தை மறைமுகமாக மீண்டும் கொண்டு வருகிறார் என்ற குற்றச்சாட்டு எழுகிறது. ஜஸ்பிரித் பும்ரா இல்லாமல் இந்தியா பல டி20 போட்டிகளை வென்றிருக்கிறது, அதேபோல் அர்ஷ்தீப்பும் அணியில் தகுதியுடன் இருக்க வேண்டியது அல்லவா?
அர்ஷ்தீப்பிற்கு அணியில் இடம் உறுதி இல்லாத நிலையை உருவாக்கி, சில போட்டிகளில் மட்டுமே அவரை மாற்று வீரராகப் பயன்படுத்துவது அவரது திறமையைச் சிதைக்கும் செயல். கோலி, ரோஹித் சர்மா போன்றோர் உருவாக்கிய திறமையை கம்பீர் அழிக்கக் கூடாது என்பதே விமர்சகர்களின் கருத்து.
அதேபோல சஞ்சு சாம்சனைக் கழித்துக்கொண்டு, ஷுப்மன் கில்லைக் கொண்டு வந்தார். மேலும் சஞ்சுவுக்குப் பதிலாக அக்ஷர் படேலை மேலிடத்தில் களமிறக்கிய சம்பவமும் நடந்தது. கேப்டன்களின் அதிகாரத்தையே கம்பீர் கையில் எடுத்து வருகிறார் என்று குற்றம்சாட்டப்படுகிறது. முந்தைய போட்டியில் சூரியகுமார் யாதவ் பேட் செய்யவில்லை, ஆனால் நேற்று வரிசை முறையே மாற்றப்பட்டது. என்ன நடக்கிறது என்பது யாருக்கும் புரியவில்லை. வெற்றி-தோல்வி இரண்டாம் நிலை; திறமைகளை ஒழித்து விடும் செயல்தான் கவலைக்குரியது.
இதேபோல் கோலியின் ஆதரவுடன் வளர்ந்த ரிங்கு சிங் – அவரை கம்பீரே கேகேஆர் அணியில் முந்தைய காலத்தில் புறக்கணித்தார். தற்போது ஆசியக் கோப்பை அணியில் இடம் பெற்றிருந்தாலும், வாய்ப்பு கிடைக்கவில்லை. அதற்கு பதிலாக ஷிவம் துபேக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. காரணம் – அவர் சிஎஸ்கே வீரர் என்பதுதான் என சந்தேகம் எழுகிறது.
வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் ஷுப்மன் கில் அவுட்டானவுடன், 3வது இடத்தில் ஷிவம் துபே அனுப்பப்பட்டார். ஆனால் அவர் 3 பந்துகளில் 2 ரன்கள் எடுத்து விரைவில் கேட்ச் கொடுத்தார். அப்போது சஞ்சு சாம்சனுக்கு என்ன குறை இருந்தது? அவரை ஏன் புறக்கணிக்க வேண்டும்? அதே சமயம், சூரியகுமார் யாதவ் பரிசளிப்பு மேடையில் “ஒரு முயற்சி செய்தோம், வேலை செய்யவில்லை, ஆனால் தொடர்ந்து முயற்சி செய்வோம்” என்று கூறியதுமே சஞ்சு, ரிங்கு போன்றோரின் வாய்ப்புகள் முற்றிலும் தடுக்கப்படுவதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
புள்ளிவிவரங்களும் இதையே காட்டுகின்றன: ஏப்ரல் 2024க்குப் பிறகு, ஷிவம் துபே ஸ்பின் பந்துவீச்சிற்கு எதிராக சராசரி 21 ரன்கள் மட்டுமே எடுத்து வருகிறார். ஸ்ட்ரைக் ரேட்டும் 166-இல் இருந்து 121 ஆகக் குறைந்துள்ளது. இந்நிலையில் சஞ்சுவுக்கு பதிலாக அவர் களமிறங்குவது எந்த அடிப்படையில்? என கேள்வி எழுகிறது.
ஆகாஷ் சோப்ரா, வருண் ஆரோன் உள்ளிட்டோர் கூட இத்தகைய “பேட்டிங் வரிசை மாற்றங்களால் எந்தப் பயனும் இல்லை” எனத் திட்டவட்டமாகக் கூறுகின்றனர்.
கம்பீரின் அணுகுமுறையால் பாதிக்கப்பட்ட வீரர்கள் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது – சர்பராஸ் கான், ஸ்ரேயஸ் அய்யர், சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், அர்ஷ்தீப் சிங்… இன்னும் அதிகப்படாமல் இருக்க பிசிசிஐ புதிய தலைவர் உடனடி முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதே வலியுறுத்தப்படுகிறது.