‘The Ba****ds of Bollywood’ சீரிஸுக்கு எதிர்ப்பு: சமீர் வான்கடே டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு*
நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான ‘The Ba****ds of Bollywood’ சீரிஸில் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் காட்சிகள் உள்ளதாகக் கூறி, அந்த சீரிஸை தயாரித்த ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவன உரிமையாளர்கள் ஷாருக்கான், கவுரி கான் மற்றும் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்துக்கு எதிராக போதைப்பொருள் தடுப்பு பிரிவு முன்னாள் அதிகாரி சமீர் வான்கடே அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஆர்யன் கான் சம்பவம்: 2021 அக்டோபர் 2 அன்று மும்பையில் இருந்து கோவா நோக்கிச் சென்ற கார்டிலியா நிறுவனத்தின் சொகுசுக் கப்பலில் நடந்த பார்ட்டியில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேர் என்சிபி அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து மொத்தம் 21 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர், ஆர்யன் கானை காப்பாற்ற ரூ.25 கோடி லஞ்சம் பெற்றதாகக் கூறி சிபிஐ, சமீர் வான்கடே மீது வழக்கு பதிவு செய்தது.
இதற்கிடையில், ஒரு சாட்சி — independent witness — என்சிபி அதிகாரிகள் மற்றும் சிலர் ரூ.25 கோடி கோரியதாகக் கூறியதால் வழக்கில் பெரிய திருப்பம் ஏற்பட்டது. அதன் பின்னர், வான்கடே மீது துறை ரீதியாக நடந்த விசாரணை விவரங்களை சிபிஐக்கு அனுப்பியதால் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
ரூ.2 கோடி இழப்பீடு கோரிக்கை: தற்போது, நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியான ‘The Ba***ds of Bollywood’ சீரிஸில் தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் காட்சிகள் உள்ளன என்று கூறி, சமீர் வான்கடே டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். தனது நற்பெயரை சேதப்படுத்தியதற்காக அவர்கள் ரூ.2 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், அது நேரடியாக டாடா புற்றுநோய் சிகிச்சை மையத்துக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
வழக்கறிஞர் கருத்து: “நெட்ஃப்ளிக்ஸில் வெளியான இந்த சீரிஸில் உள்ள காட்சிகள் போதை தடுப்பு பிரிவை தவறாகச் சித்தரிக்கின்றன. இதனால் மக்கள் மனதில் அந்த அமைப்புகள் மீது எதிர்மறையான எண்ணம் உருவாகும்; நம்பிக்கை சிதையும்” என்று சமீர் வான்கடேவின் வழக்கறிஞர் ஆதித்ய கிரி குறிப்பிட்டார்.
மனுவில் குற்றச்சாட்டு: மேலும், ஆர்யன் கானின் வழக்கு இன்னும் மும்பை உயர் நீதிமன்றம் மற்றும் என்டிபிஎஸ் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் சூழலில், தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சீரிஸ் உருவாக்கப்பட்டிருப்பது திட்டமிட்டது என வான்கடே குற்றம்சாட்டினார்.
அதோடு, சீரிஸில் ஒரு கதாபாத்திரம் ‘சத்யமேவ ஜெயதே’ என்ற தேசிய முழக்கத்தைச் சொல்லிவிட்டு நடுவிரல் காட்டும் காட்சி இடம்பெற்றுள்ளது. இது தேசத்திற்கே அவமரியாதை எனவும் தனது மனுவில் வான்கடே சுட்டிக்காட்டியுள்ளார்.