‘இந்திய மைதானங்களில் ரசிகர்களின் ஆரவாரம் அபாரமானது’ – ஸ்மிருதி மந்தனா பாராட்டு
இந்திய மைதானங்களில் ரசிகர்கள் எழுப்பும் ஆரவாரம் அசாதாரணமானது என இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார்.
வரும் செப்டம்பர் 30-ம் தேதி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை இந்தியா – இலங்கையில் தொடங்குகிறது. முதல் சுற்று ரவுண்ட் ராபின் முறையில் நடைபெறும். மொத்தம் 8 அணிகள் இதில் பங்கேற்கின்றன. தொடக்க ஆட்டத்தில் இந்தியா – இலங்கை அணிகள் மோதுகின்றன.
முதல் முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றும் இலக்குடன் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி களமிறங்குகிறது. மகளிர் உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியா இருமுறை இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ஜியோ ஸ்டார்க்கு அளித்த பேட்டியில் மந்தனா கூறியதாவது:
“17 வயதில் இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பைப் பெற்றேன். எனது பெயர் பொறிக்கப்பட்ட ஜெர்ஸி அறைக்குள் வந்த அந்த தருணம் என் வாழ்க்கையில் உணர்ச்சிப்பூர்வமான ஒன்றாக இருந்தது. அதை பெற்றோர்களுடனும் சகோதரருடனும் பகிர்ந்தபோது ஏற்பட்ட மகிழ்ச்சி இன்னும் நினைவில் உள்ளது.
ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் சவால்கள் இருக்கும். எங்கள் குடும்பம் சாங்கலியில் இருந்தபோது, பெண்கள் அதிகம் கிரிக்கெட் விளையாடுவதில்லை. நான் பயிற்சிக்காக புனே செல்ல வேண்டியிருந்தது. சில மாதங்கள் குடும்பத்திலிருந்து விலகியிருப்பதும் 14 வயதில் எனக்கு கடினமாக இருந்தது.
காமன்வெல்த் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டம் மறக்க முடியாத அனுபவம். எதற்கும் போராடும் மனப்பாங்கு எங்கள் அணியில் அதிகரித்துள்ளது. இந்த உலகக் கோப்பையை நாங்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
இந்தியாவில் மகளிர் கிரிக்கெட் மிகப் பெரிய முன்னேற்றத்தை கண்டுள்ளது. மகளிர் பிரீமியர் லீக் போட்டிகளில் ரசிகர்களின் ஆரவாரத்தை பார்த்தோம். அதுபோல, இந்த உலகக் கோப்பையிலும் இந்திய மைதானங்களில் ரசிகர்களின் உற்சாகம் அபாரமாக இருக்கும்” என்றார்.