பிஹாரில் 75 லட்சம் பெண்களுக்கு ரூ.10,000 நிதி உதவி: பிரதமர் மோடி திட்டத்தை தொடங்கினார்

பிஹாரில் 75 லட்சம் பெண்களுக்கு முதற்கட்டமாக ரூ.10,000 நிதி உதவி வழங்கும் முதல்வரின் மகளிர் வேலைவாய்ப்பு திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். இதற்காக ரூ.7,500 கோடி பெண்களின் வங்கிக் கணக்குகளில் அனுப்பப்பட்டுள்ளது.

பிஹார் அரசின் ‘முதல்வர் மகளிர் வேலைவாய்ப்பு திட்டம்’ இன்று மாநிலம் முழுவதும் தொடங்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் திட்டத்தை தொடங்கினார். பாட்னாவில் நடைபெற்ற தொடக்க விழாவில் முதல்வர் நிதிஷ் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இத்திட்டத்தின் கீழ் 75 லட்சம் பெண்களின் வங்கிக் கணக்குகளில் முதற்கட்டமாக ரூ.10,000 அனுப்பப்பட்டுள்ளது. பிஹார் அரசு தெரிவித்ததாவது, திட்டத்தில் இணைந்த பெண்களுக்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை தொடர்ச்சியான நிதி உதவி வழங்கப்படும்.

பெண்கள் இந்த நிதியை விவசாயம், கால்நடை வளர்ப்பு, கைவினை, தையல், நெசவு மற்றும் பிற சிறு தொழில்களில் பயன்படுத்திக் கொள்ளலாம். பெண்களை சுயசார்பு கொண்டவர்களாக மாற்றும் முயற்சியின் ஒரு பகுதியாக இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி பயனாளிகளுடன் கலந்துரையாடி, “பிஹாரின் தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்களின் நலனுக்காக அரசு முழு அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது. இன்று ‘முதல்வர் மகளிர் வேலைவாய்ப்பு திட்டத்தை’ தொடங்குவது எனக்கு பெருமை தருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, “பெண்களை மையமாகக் கொண்டு அரசாங்கம் கொள்கைகள் வகிப்பதால் சமூகத்தின் மற்ற பிரிவுகளுக்கும் பயன் ஏற்படும். மத்திய அரசின் வீடு கட்டும் திட்டம் போன்ற மாற்றங்களை உலகம் முழுவதும் காண்கிறது. ஆரோக்கியமான பெண்கள் வலுவான குடும்பங்களைக் கொடுக்கும் உதாரணம். இத்திட்டத்தின் கீழ் கிராமங்கள் மற்றும் நகரங்களில் 4.5 லட்சத்துக்கும் மேற்பட்ட சுகாதார முகாம்கள் நடக்கின்றன; ரத்த சோகை, ரத்த அழுத்தம், நீரழிவு, புற்றுநோய் போன்ற நோய்கள் பரிசோதிக்கப்படுகின்றன. பெண்கள் முன்னேறும்போது சமூகமும் முன்னேறும்”.

Facebook Comments Box