திருமலையில் நாளை கருட சேவை: ஆண்டாள் சூடிய மாலை திருப்பதிக்கு அனுப்பப்பட்டது

திருப்பதியில் நாளை நடைபெறும் கருட சேவைக்கு மலையப்ப சுவாமிக்கு அணிவிக்க ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ஆண்டாள் சூடிய மாலை, பட்டு வஸ்திரம், கிளி உள்ளிட்ட மங்களப் பொருட்கள் நேற்று திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மூலவர் வடபத்ரசயனர் (பெரிய பெருமாள்) தினசரி பூஜையின் போது ஆண்டாள் சூடிய மாலையை அணிந்து பக்தர்களுக்கு அருள் வழங்குகிறார்.

அதேபோல், மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் சித்திரை திருவிழா, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சித்திரைத் தேரோட்டம், திருப்பதி புரட்டாசி பிரம்மோற்சவ விழாவில் கருட சேவையில் பெருமாளுக்கு அணிவிக்க ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ஆண்டாள் சூடிய பூமாலை, பட்டு வஸ்திரம், கிளி ஆகியவை அனுப்பி வைக்கப்படும்.

இந்த ஆண்டு திருப்பதி புரட்டாசி பிரம்மோற்சவ விழாவில், மூலவர் வெங்கடேசப் பெருமாளும் உற்சவர் மலையப்ப சுவாமியும் அணிவதற்காக ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிய பூமாலை, கிளி, பட்டு வஸ்திரம் போன்ற மங்களப் பொருட்கள் திருப்பதிக்கு அனுப்பப்பட்டன.

நாளை (செப். 28) திருப்பதியில் மலையப்ப சுவாமி மோகன அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் வழங்குவார். அதே நாள் மாலை கருட சேவையின் போது ஆண்டாள் சூடிய மாலை அணிந்து மலையப்ப சுவாமி மோகினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். இதற்காக ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரம்மாண்ட மாலை தயாரிக்கப்பட்டு, நேற்று பிற்பகல் ஒரு மணியளவில் ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர் ஆண்டாள் சூடிய பூமாலை, பட்டு வஸ்திரம், கிளி ஆகியவை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு திருப்பதிக்கு அனுப்பப்பட்டன.

Facebook Comments Box