தங்கம் மீண்டும் ரூ.85,000-ஐ கடந்தது; வெள்ளி விலை வரலாறு காணாத உச்சம்

22 காரட் நகைத் தங்கத்தின் விலை இன்று (செப்.27) மீண்டும் ஒரு பவுன் ரூ.85,000-ஐ தாண்டியுள்ளது. வெள்ளி விலை கூட புதிய வரலாற்றுச் சாதனையை எட்டியுள்ளது.

சர்வதேச பொருளாதார சூழ்நிலை, அமெரிக்க டாலருக்கு சமமான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவை தங்க விலை நிர்ணயத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அமெரிக்காவில் இந்திய இறக்குமதி பொருட்களுக்கு 50% வரி, டாலருக்கு சமமான ரூபாய் மதிப்பில் வீழ்ச்சி, உக்ரைன்-ரஷ்யா போர், இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் போன்ற காரணங்களால் தங்க விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

கடந்த 23-ம் தேதி தங்கம் விலை ஒரு பவுன் ரூ.85,120-க்கு விற்பனை செய்யப்பட்டது, இது வரலாறு காணாத உச்சமாக இருந்தது. அடுத்து இரண்டு நாட்களில் விலை சிறிது குறைந்தது. செப்.26-ஆம் தேதி ஒரு பவுன் ரூ.84,400-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இன்றைய நிலவரப்படி சென்னையில் 22 காரட் நகைத் தங்கத்தின் விலை மீண்டும் ரூ.85,000-ஐ தாண்டியுள்ளது. கிராம் விலை ரூ.10,640-க்கு உயர்ந்து, பவுன் விலை ரூ.85,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் தங்கம் ரூ.92,856-க்கு, 18 காரட் தங்கம் ரூ.69,288-க்கு விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை புதிய உச்சம்: சென்னையில் நேற்று வெள்ளி ஒரு கிராம் ரூ.153-க்கு விற்பனையாக இருந்தது. இன்று வெள்ளி கிராம் ஒன்றுக்கு ரூ.6 உயர்ந்து, ரூ.159-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோவிற்கு ரூ.6,000 உயர்வு ஏற்பட்டுள்ளது; புதிய விலை ரூ.1,59,000.

வெள்ளி விலை ஏன் உயர்கிறது? தங்கத்தில் முதலீடு செய்தவர்களின் அடுத்த நிலையாக வெள்ளியில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை தினத்தோறும் அதிகரிக்கிறது. தொழில் துறையிலும் வெள்ளியின் தேவையும் அதிகரித்து வருகிறது. இதனால் வெள்ளி விலை புதிய உச்சத்தை அடைந்துள்ளது.

மேலும், நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் வாயிலாக வெள்ளி நகைகள் அதிக அளவில் இறக்குமதி செய்யப்பட்டன. இதனால் உள்ளூர் நகை தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டு, வேலைவாய்ப்பும் குறைந்து விட்டது. அதன்பின் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை மத்திய அரசு வெள்ளி இறக்குமதிக்கு தடை விதித்தது.

Facebook Comments Box