பலதரப்பு வர்த்தகத்தை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்: ஜெய்சங்கர்
ஈர்குறிக்கப்பட்ட இறக்குமதி வரி உயர்வுகளும், தளர்வுகளும் நடக்கும் சூழலில், பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாப்பது அவசியம் என்று ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.
பிரிக்ஸ் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டத்தில் உரையாற்றி, ஜெய்சங்கர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட தகவலில், “உலகம் பன்முக நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. இந்நிலையில், பிரிக்ஸ் நாடுகள் மாற்றத்திற்கு வலுவான குரலாக இருக்கின்றன. உலகம் பதற்றத்திலேயே உள்ளது. அமைதியை நிலைநாட்டல், உரையாடல், ராஜதந்திரம், சர்வதேச சட்டத்தை கடைப்பிடித்தல் ஆகியவற்றில் பிரிக்ஸ் நாடுகள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும்” என்றார்.
ஜெய்சங்கர் மேலும், “ஐநா பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தம் செய்யும் போது பிரிக்ஸ் நாடுகள் ஒருமித்த அழைப்பு விடுக்க வேண்டும். பாதுகாப்பு நடவடிக்கைகள், இறக்குமதி வரி உயர்வுகள் மற்றும் வரி அல்லாத தடைகள் வர்த்தக ஓட்டங்களை பாதிக்கின்றன. எனவே, பலதரப்பு வர்த்தக அமைப்பை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும். தொழில்நுட்பம், புதுமை போன்றவை பிரிக்ஸ் ஒத்துழைப்பின் அடுத்த கட்டத்தை வரையறுக்கும். உணவு பாதுகாப்பு, எரிசக்தி பாதுகாப்பு, காலநிலை மாற்றம், டிஜிட்டல் மாற்றம், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் புதுமை ஆகியவற்றில் இந்தியா முக்கிய கவனம் செலுத்தும்” என தெரிவித்தார்.