விஜய் பிரச்சாரத்தை விடுங்க.. நாமக்கலில் இப்படியொரு விஷயம் நடக்குது தெரியுமா..? 2 லட்சம் பேரின் நிலை?
தவெக தலைவர் விஜய் இன்று நாமக்கலில் பிரச்சாரம் செய்த நிலையில், தமிழ்நாடு மக்கள் முழுவதும் நாமக்கல் குறித்து தான் பேசி வருகின்றனர். நாமக்கல் இந்தியாவின் லாரி மற்றும் ரிக் பாடி பில்டிங் வர்த்தகத்திற்கு பெயர்பெற்றது, ஆனால் இத்துறை தற்போது மோசமான நிலையை எட்டியுள்ளது என்பது எத்தனை பேருக்கு தெரியும். ஒரு காலத்தில் லாரி மற்றும் ரிக் பாடி பில்டிங் வர்த்தகத்தை மட்டுமே நம்பி பல லட்சம் தொழிலாளர்கள் இருந்தனர்; ஆனால் இப்போது அவர்களின் நிலை என்ன தெரியுமா..?
தென்னிந்தியாவின் லாரி பாடி கட்டுமானத் தலைநகராக கொண்டாடப்பட்ட நாமக்கல், தற்போது தனது முக்கியத் தொழிலில் கடும் சரிவை சந்தித்து வருகிறது என்பது மிகவும் வறுத்திற்குரிய விஷயம்.
நாமக்கல் மற்றும் அருகிலுள்ள திருச்செங்கோடு பகுதிகளில் தான் லாரி மற்றும் ரிக் பாடி பில்டிங் வர்த்தகம் அதிகம். இத்துறையின் வர்த்தகம் உச்சத்தில் இருக்கும் போது இப்பகுதியில் சுமார் 120 லாரி பாடி பில்டிங் தொழிற்சாலைகள் இருந்தன. இந்த 120 தொழிற்சாலைகள் ஒவ்வொரு மாதமும் 1,500 லாரிகள் முழுமையாக கட்டி டெலிவரி செய்தது.
நாமக்கல் மற்றும் திருச்செங்கோட்டில் சுமார் 15 வகையான டிரக்குகள், டேங்கர்கள் மற்றும் டிரெய்லர்கள் 39 டன் ஏற்றுத் திறன் வரை தயாரிக்கப்பட்டது. இதுவே நாமக்கல் மாவட்டத்தின் முக்கிய பொருளாதார ஊக்கியாக இருந்தது.
ஆனால் தற்போது, 1,500 லாரிகள் தயாரிக்கப்பட்ட இடத்தில் வெறும் 500 லாரிகள் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன. பல சிறிய பட்டறைகள் ஒரு மாதத்துக்கு ஒரு ஆர்டர் மட்டுமே பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.
இப்பகுதியில் இரண்டு அல்லது மூன்று பெரிய நிறுவனங்கள் மட்டுமே அதிகளவிலான வர்த்தகத்தை பெற்று வருகின்றன. மீதமுள்ளவை சிறிய அளவிலான வர்த்தகத்துடன் லாபம் பெறுவதில் போராடுகின்றன. புதிய வர்த்தகத்தை பெறுவதற்காக லாபத்தை குறைத்து இயங்க வேண்டிய கட்டாயத்தில் பல நிறுவனங்கள் உள்ளன என்பது தற்போதைய நிதர்சனம்.
நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு பகுதியில் லாரி பாடி பில்டிங் வர்த்தகத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பைப் பெற்றனர். ஆனால், தற்போது 30 சதவீதம் ஊழியர்கள் வேறு தொழில்களுக்கு மாறியுள்ளனர் என்பது கூடுதலாக வருத்தம் அளிக்கும் செய்தியாக உள்ளது.
20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட திறமையான ஊழியர்கள் தற்போது கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசம் போன்ற இடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் செல்கின்றனர். அங்கு லாரி பாடி கட்டுமானத் தொழில் வளர்ச்சி காணத் துவங்கியது. இதற்கு முக்கியமான காரணம். இந்த இடம்பெயர்வு நாமக்கல் மாவட்ட பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது என இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதோடு இத்துறையில் போட்டியும் அதிகரித்து, லாப அளவுகள் குறைவதும் பெரிய பிரச்சனையாக உள்ளது. இதற்கான முக்கிய காரணம் விலைவாசி உயர்வு. கடந்த சில வருடங்களில் லாரி பாடி பில்டிங்-க்குத் தேவையான ஸ்டீல் மற்றும் பிற மூலப்பொருட்களின் விலை பெரிதும் உயர்ந்துள்ளது; இது உற்பத்தி செலவை அதிகரிக்கிறது.
மேலும் மின்சாரக் கட்டணங்கள் மற்றும் வாடகை உயர்வு சிறிய தொழிற்சாலைகளை கடுமையாக பாதிக்கிறது. இதனால் பெரிய நிறுவனங்கள் போட்டியிட முடியாமல் போராடி வருகின்றன.