திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் அருகிலுள்ள அத்தங்கி ஸ்வாமி திருமாளிகையில் நவராத்திரி விழா
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்கு அருகே உள்ள அத்தங்கி ஸ்வாமி திருமாளிகை, வைணவ சம்பிரதாயத்தையும் பண்டைய பாரம்பரியத்தையும் காக்கும் மையமாகத் திகழ்கிறது. வைணவத்தைப் பரப்புவதும், பக்தி மார்க்கப் பணிகளைச் செய்வதும் இதன் முக்கிய நோக்கமாகும்.
வைணவ சம்பிரதாய வளர்ச்சிக்காக பகவத் ராமானுஜர் 74 சீடர்களை நியமித்தார். அவர்களில் ஒருவரின் வம்சாவளியில் பிறந்த உ.வே. ஸ்ரீ அத்தங்கி திருமலாச்சாரியாரின் கைங்கர்யம் சிறப்பானது. 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த திருமாளிகையில் லட்சுமி நரசிம்ம பெருமாள் பிரதான தெய்வமாக வழிபடப்படுகிறார்.
தற்போது, அத்தங்கி ஸ்ரீ திருமலாச்சாரியாரின் திருக்குமாரர் உ.வே. ஸ்ரீ அத்தங்கி ஸ்ரீநிவாசாச்சாரியார், ஆச்சாரியராக இருந்து பலருக்கு வைணவ சம்பிரதாயங்களை உபதேசித்து வருகிறார். ஆண்டுதோறும் இங்கு நவராத்திரி விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. விழாவில் 200 ஆண்டுகள் பழமையான பொம்மைகள் முக்கிய இடம் பெறுகின்றன.
உ.வே. ஸ்ரீ அத்தங்கி ஸ்ரீநிவாசாச்சாரியார் கூறுகையில்:
“என் தந்தையாரின் விருப்பப்படி நவராத்திரி விழாவை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறேன். இங்கு வைக்கப்படும் பொம்மைகள் அனைத்தும் மிகப்பழமையானவை. மகாவிஷ்ணு, கண்ணன், ராமபிரான், வாமன அவதாரம் போன்றவை 80 ஆண்டுகள், கீதோபதேசம் மற்றும் ருக்மிணி சமேத கிருஷ்ணர் போன்றவை 100 ஆண்டுகள், மற்ற பொம்மைகள் 200 ஆண்டுகள் பழமையானவை.
இவற்றை பராமரிப்பது கடினமானதாயினும், பாரம்பரியத்தை காக்கும் நோக்கில் தொடர்ந்து செய்து வருகிறேன். இந்த கொலுவின் மூலம் இளம் தலைமுறைக்கு நமது கலாச்சாரம், வைணவ சம்பிரதாயங்கள் ஆகியவை எடுத்துச் செல்லப்படுகின்றன. ஆன்மிக முன்னேற்றம் மற்றும் இறைவனோடு ஒன்றரக் கலக்க வேண்டும் என்பதையே இவ்விழா வலியுறுத்துகிறது” என்றார்.