திருப்பதி பிரம்மோற்சவம்: மலையப்ப சுவாமிக்கு உலர் பழம், மலர் அலங்காரம்
திருப்பதி பிரம்மோற்சவ விழாவின் முக்கிய தெய்வமான உற்சவர் மலையப்ப சுவாமிக்கு நேற்று சிறப்பு திருமஞ்சன சேவை நடைபெற்றது. இதில் சுவாமிக்கு உலர் பழங்களும் மலர்களும் கொண்டு அபூர்வ அலங்காரம் செய்யப்பட்டன.
பிரம்மோற்சவத்தின் ஒன்பது நாட்களிலும், மதியம் கோயிலின் ரங்கநாயக மண்டபத்தில் உற்சவர்களுக்கு அபிஷேகம் செய்வது வழக்கம். குறிப்பாக 4-ஆம் நாளும் 7-ஆம் நாளும், ஸ்ரீதேவி, பூதேவி உடன் மலையப்ப சுவாமிக்கு இரண்டு முறை சிறப்பு திருமஞ்சன சேவை நடைபெறும் மரபு உள்ளது.
அதன்படி நேற்று 4-ஆம் நாளானதால், பால், தயிர், இளநீர், மஞ்சள், குங்குமம், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பாதாம், பிஸ்தா, உலர் திராட்சை, ஏலக்காய், குங்குமப்பூ, வெட்டிவேர், கொம்பு மஞ்சள், துளசி, ரோஜா மலர்கள் கொண்டு அழகிய அலங்காரம் செய்யப்பட்டு சுவாமி தரிசனம் அளித்தார்.
இவ்விழாவில் சின்ன ஜீயர் சுவாமிகள், நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால், அதிகாரிகள் மற்றும் அர்ச்சகர்கள் பங்கேற்றனர். உலர் பழம் மற்றும் மலர் அலங்காரம் பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.