இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரை நிறுத்த 21 அம்ச அமைதித் திட்டத்தை அமெரிக்கா அறிவித்தது
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போரை நிறுத்த அமெரிக்கா 21 அம்ச கொண்ட அமைதித் திட்டத்தை அறிவித்துள்ளது. பாலஸ்தீனத்தின் காசா பகுதியை நிர்வகிக்கும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் 2023 அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து தீவிரவாத தாக்குதல் நடத்தினார்கள். இதில் 1,139 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். மேலும் 251 பேரை ஹமாஸ் காசா முனைக்கு பிணைக் கைதிகளாக கடத்தியுள்ளது.
இதற்குப் பிறகு, இஸ்ரேல் ஹமாஸ் ஆயுதக்குழுவை இலக்கு வைத்து காசா மீது அதிரடி தாக்குதல்கள் நடத்தி வருகிறது. இத்தகவலின் படி, இஸ்ரேல்-காசா போர் காரணமாக 65,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், அமெரிக்கா காசாவில் போரை நிறுத்தும் ஒப்பந்தத்தை இறுதி செய்ய முயற்சி செய்கிறது.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியதாவது: ஹமாஸிடமிருந்து பிணைக் கைதிகளை மீட்டு போரை முடிவுக்குக் கொண்டு வருவோம். ஹமாஸ் பிணைக் கைதிகளை 48 மணி நேரத்துக்குள் விடுவிக்க வேண்டும் என்றும் அமெரிக்கா விதித்துள்ளது. இதேவேளை, இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன் இடையிலான 21 அம்ச அமைதித் திட்டத்தை அமெரிக்கா அறிவித்துள்ளது.
21 அம்சத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
- காசா பகுதி தீவிரவாதமில்லாத, அமைதியான மண்டலமாக மாற்றப்படும்; காசா மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதே இதன் முக்கிய நோக்கம்.
- இரு தரப்பும் திட்டத்தை ஏற்கும் பட்சத்தில் உடனடியாக மோதல்கள் நிறுத்தப்படும். இஸ்ரேல் நடவடிக்கைகளை நிறுத்தி, படிப்படியாக காசாவிலிருந்து வெளியேறும்.
- பாலஸ்தீனியர்களைக் கொண்ட இடைக்கால நிர்வாகம் காசாவில் அன்றாட நிர்வாகத்தை கவனிக்கும்.
- அமெரிக்காவின் தலைமையில் அரபு மற்றும் ஐரோப்பிய நாடுகள் சேர்ந்த புதிய சர்வதேச குழு இந்த திட்டத்தை கண்காணிக்கும்; காசாவின் மறுசீரமைப்புக்கு நிதி திரட்டுவதும் இதற்குள் வரும்.
பிணைக் கைதிகள் மற்றும் போர் நிறுத்தம்:
இஸ்ரேல் சம்மதம் அளித்த 48 மணி நேரத்துக்குள் உயிருடன் உள்ள மற்றும் இறந்த பிணைக் கைதிகள் காசா அருகே ஒப்படைக்கப்படுவர். போர் உடனடியாக நிறுத்தப்படும் என்பது திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாலஸ்தீன தேசிய அங்கீகாரம்:
பல நாடுகள் பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்க திட்டமிட்டாலும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, “நாங்கள் ஒருபோதும் ஏற்கமாட்டோம்” என அறிவித்துள்ளார்.