கேரளாவில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம்
கேரளாவில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாநில சட்டப்பேரவையில் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணியும் (LDF), எதிர்க்கட்சிகளின் ஐக்கிய ஜனநாயக முன்னணியும் (UDF) இணைந்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.
அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
- இந்த ஆண்டு உள்ளாட்சித் தேர்தலும், அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெற உள்ள நிலையில், தற்போது வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்வது தவறானது.
- 2002 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு திருத்தம் செய்வது அறிவியல்பூர்வமற்றது.
- இது, தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கான முன்னோட்ட நடவடிக்கை என்ற சந்தேகம் பரவலாக நிலவுகிறது. பீகாரில் இது உறுதியாகியுள்ளதாகவும் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 1987க்குப் பிறகு பிறந்தவர்கள் வாக்களிக்க, பெற்றோரில் ஒருவரின் குடியுரிமைச் சான்றிதழ் அவசியம் என்பதான நிபந்தனை, வயது வந்தோரின் வாக்களிக்கும் அடிப்படை உரிமையை மறுக்கும் செயல்.
- குடியுரிமை திருத்தச் சட்டத்தை (CAA) மீண்டும் அமல்படுத்தும் முயற்சியாகவும் இது பார்க்கப்படுகிறது; இது ஜனநாயகத்துக்கு பெரிய சவாலாகும்.
மேலும், உச்சநீதிமன்றத்தில் இதுகுறித்த வழக்கு இன்னும் விசாரணையில் இருப்பதால், அரசியல் சாசன ரீதியாகவும் இது செல்லத்தக்கதா என்பது தீர்மானிக்கப்படாத நிலையில், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை நியாயமற்றதாக தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு, கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி மாநில தலைமை தேர்தல் அதிகாரி யு. கேல்கர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. அதில் ஆளும் LDF மற்றும் எதிர்க்கட்சியான UDF, சிறப்பு தீவிர திருத்தத்தை உள்ளாட்சித் தேர்தல் முடிந்த பின்னரே மேற்கொள்ள வேண்டும் எனக் கோரியிருந்தன. அதோடு, ஆதார ஆவணங்களில் ரேஷன் கார்டையும் சேர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தன.
இதையடுத்து, கேல்கர், உள்ளாட்சித் தேர்தல் முடியும் வரை சிறப்பு தீவிர திருத்தத்தை ஒத்திவைக்க தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரை செய்தார். எனினும், ஆணையத்தின் இறுதி முடிவு வெளியாகாத நிலையில், கேரள சட்டப்பேரவையில் ஒருமனதாக எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.