“ரஷ்யாவை தவிர உலகின் எங்கிருந்தும் இந்தியா எண்ணெய் வாங்கலாம்” – அமெரிக்கா
இந்தியா உலக நாடுகளில் எதிலிருந்தும் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம், ஆனால் ரஷ்யாவிலிருந்து வாங்கக் கூடாது என அமெரிக்க எரிசக்தி செயலாளர் கிறிஸ் ரைட் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்த அவர்,
“உலகில் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் பல நாடுகள் உள்ளன. எனவே இந்தியா ரஷ்யாவிடம் இருந்து வாங்கத் தேவையில்லை. மலிவான விலையில் கிடைக்கிறது என்பதற்காக இந்தியா ரஷ்ய எண்ணெயை வாங்குகிறது. ஆனால் அது ஆயிரக்கணக்கான உயிர்களை பறிக்கும் ஒருவருக்கு நிதியளிப்பது போன்றது.
இந்தியா எங்களுடன் இணைந்து எண்ணெய் வாங்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். ரஷ்யாவைத் தவிர்த்து எந்த நாட்டிலிருந்தும் இந்தியா வாங்கலாம். நாங்கள் இந்தியாவை தண்டிக்க விரும்பவில்லை; ரஷ்யா-உக்ரைன் போர் முடிவுக்கு வர வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். இந்தியாவுடன் உறவை வளர்க்க விரும்புகிறோம்.
நான் இந்தியாவின் பெரிய ரசிகன். இந்தியாவுடன் அதிக எரிசக்தி வர்த்தகம், அதிக தொடர்புகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால் இந்தியா ஒரு சிக்கலான சூழலில் சிக்கியுள்ளது. ட்ரம்ப்பின் விருப்பம் உலகில் அமைதி நிலவ வேண்டும் என்பதே. உக்ரைனில் ரஷ்ய போர் கொடூரமானது; அது விரைவில் முடிவடைய வேண்டும். ஆனால் ரஷ்ய எண்ணெய் இந்தியா, சீனா, துருக்கி நாடுகளுக்குச் செல்கிறது. இதுவே ரஷ்யாவின் போருக்கு நிதியளிக்கிறது,” என்றார்.
கடந்த செவ்வாயன்று ஐ.நா. பொதுச் சபையில் பேசிய ட்ரம்ப், உக்ரைன் போருக்கான “முதன்மை நிதியளிப்பவர்கள் இந்தியா மற்றும் சீனா” என்றும் குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.