ஐரோப்பிய நாடுகளுடன் தடையற்ற வர்த்தகம் அக்டோபர் 1 முதல் அமல் – பியூஷ் கோயல்
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்ததாவது, ஐரோப்பிய நாடுகளுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அக்டோபர் 1 முதல் செயல்படும்.
உத்திரப் பிரதேசத்தில் நடைபெற்ற சர்வதேச வர்த்தக கண்காட்சியின் நிறைவுநாள் நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது,
“ஐஸ்லாந்து, லிக்டன்ஸ்டீன், நார்வே, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளுடன் இந்தியாவின் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதி செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தம் அக்டோபர் 1 முதல் அமலுக்கு வருகிறது.
உலகின் வளர்ந்த நாடுகள் இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் ஆர்வமாக உள்ளன. ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளுடனான ஒப்பந்தங்கள் ஏற்கனவே முடிக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், நியூசிலாந்து, ஓமன், பெரு, சிலி ஆகிய நாடுகளுடனும் ஒப்பந்தங்கள் தொடர்பான விவாதங்கள் நடந்து வருகின்றன.
கத்தார், பஹ்ரைன் ஆகிய நாடுகளும் இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக உறவை விரும்புகின்றன. இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 700 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டியுள்ளது. செப்டம்பர் 22 அன்று அமல்படுத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி சீர்திருத்தங்களின் தாக்கம் பல ஆண்டுகளுக்கு உணரப்படும்,” என அவர் தெரிவித்தார்.