ஐசிசி மகளிர் உலகக் கோப்பை: தொடக்க ஆட்டத்தில் இந்தியா–இலங்கை மோதல்
13வது ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இன்று குவாஹாட்டியில் தொடங்குகிறது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு மகளிர் உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெறுவது சிறப்பாகும். நவம்பர் 2 வரை நடைபெறும் இத்தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், பாகிஸ்தான் என 8 அணிகள் பங்கேற்கின்றன.
மொத்தம் 28 லீக் ஆட்டங்கள் ரவுண்ட் ராபின் முறையில் நடைபெறவுள்ளன. இந்தியாவின் 4 நகரங்களிலும், இலங்கையின் கொழும்பிலும் போட்டிகள் நடத்தப்படுகின்றன. ரூ.123 கோடி பரிசுத்தொகையுடன் நடைபெறும் இத்தொடரில், 47 வருட ஏக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்திய அணி முயற்சிக்கிறது.
இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, இலங்கையுடன் மோதுகிறது. ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், தீப்தி சர்மா உள்ளிட்டோர் இந்திய பேட்டிங்கில் பலம் சேர்க்கின்றனர். அதேசமயம், ரேணுகா சிங், அமன்ஜோத் கவுர், ஸ்நே ராணா போன்ற பந்துவீச்சாளர்கள் இலங்கை அணிக்கு சவாலாக இருப்பர்.