‘புஷ்பா 2’ படத்தை தொடர்ந்து அல்லு அர்ஜுன் நடிக்கும் புதிய படத்தை அட்லி இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த சயின்ஸ் பிக்ஷன் படத்தில் தீபிகா படுகோன் நாயகியாக நடிக்கிறார். ஜான்வி கபூர், மிருணால் தாக்குர், ராஷ்மிகா மந்தனா ஆகியோரும் நாயகிகளாக நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
படக் குழுவினர் தெரிவித்ததாவது, “இந்தப் படம் சர்வதேச தரத்தில் இந்தியாவில் தயாராகும் ‘பான் வேர்ல்ட்’. இந்திய சினிமாவில் இதுவரை இல்லாத அளவில் உருவாக்கப்படும் படம் இது.”
இதற்காக பிரபலமான ஜப்பானிய-பிரிட்டீஷ் நடனக் கலைஞர் மற்றும் நடன இயக்குநர் ஹோகுடோ கோனிஷி பணியாற்றியுள்ளார். அல்லு அர்ஜுனுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த அவர், “இந்திய திரைப்படத் துறையில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. படம் பற்றி இப்போது அதிகமாக பேச முடியாது. மிகப் பிரம்மாண்டமாக உருவாக்கப்படும் இந்த படத்துக்காக கடின உழைப்பு மற்றும் அதிக நேரம் செலவிட்டுள்ளோம்” எனக் கூறியுள்ளார்.
இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் மும்பையில் முடிவடைந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பு அடுத்த மாதம் நடைபெற உள்ளதாகவும், அபுதாபியில் லொகேஷனுக்காக முன்கூட்டியே ஆய்வு மேற்கொள்ளப்படுவதாகவும் கூறப்படுகிறது.