காசா மோதலை முடிவுக்குக் கொண்டு வரும் ட்ரம்ப்பின் திட்டம்: மோடி வரவேற்பு
காசா மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் திட்டத்தை வரவேற்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியதாவது: “காசா மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் ஒருங்கிணைந்த திட்டத்தை நாங்கள் வரவேற்கிறோம். இது பாலஸ்தீன மக்களுக்கும் இஸ்ரேல் மக்களுக்கும், மேற்காசிய பிராந்தியத்துக்கும் நீடித்த நிலையான அமைதியை, பாதுகாப்பை, வளர்ச்சிக்கான பாதையை வழங்குகிறது.
சம்பந்தப்பட்ட அனைவரும் அதிபர் ட்ரம்ப்பின் முன்முயற்சிக்குப் பின்னால் ஒன்றிணைந்து மோதலை முடிவுக்குக் கொண்டு வந்து அமைதியை ஏற்படுத்தும் இந்த முயற்சியை ஆதரிப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று தெரிவித்தார்.
ட்ரம்ப் திட்டம் என்ன?
இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போரை நிறுத்த 21 அம்ச அமைதித் திட்டத்தை அமெரிக்கா அறிவித்துள்ளது. அமைதித் திட்டத்தில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்:
- காசா பகுதி தீவிரவாதம் இல்லாத, அமைதியான மண்டலமாக மாற்றப்படும்.
- காசா மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதே இதன் முக்கிய நோக்கம்.
- இரு தரப்பும் இந்தத் திட்டத்தை ஒப்புக்கொண்டால், உடனடியாக மோதல்கள் நிறுத்தப்படும்.
- இஸ்ரேல் தனது நடவடிக்கைகளை நிறுத்தி, காசாவிலிருந்து படிப்படியாக வெளியேறத் தொடங்கும்.
- பாலஸ்தீனர்களை கொண்ட ஒரு குழுவைக் கொண்டு காசாவில் இடைக்கால நிர்வாகம் அமைக்கப்படும், அந்த அமைப்பு காசாவின் அன்றாட நிர்வாகத்தைக் கவனிக்கும்.
- அமெரிக்காவின் தலைமையில் அரபு மற்றும் ஐரோப்பிய நாடுகளைக் கொண்ட புதிய சர்வதேச குழு இதைக் கண்காணிக்கும்.
- பாலஸ்தீனிய ஆணையம் தனது சீர்திருத்தத் திட்டத்தை முடிக்கும் வரை காசாவின் மறுசீரமைப்புக்கு நிதி திரட்டுவது இக்குழுவின் பணியாகும்.
இந்தத் திட்டத்திற்கு இஸ்ரேல் சம்மதம் தெரிவித்த 48 மணி நேரத்துக்குள், உயிருடன் உள்ள மற்றும் இறந்த அனைத்து பிணைக் கைதிகளும் இஸ்ரேல் வசம் ஒப்படைக்கப்படுவார்கள். போர் உடனடியாக நிறுத்தப்படும்.