ரூ.30 ஆயிரம் கோடி செலவில் ஆகாயக் காவல் ஏவுகணை வாகனங்கள்: அறிவிப்பு வெளியிட்டது இந்திய ராணுவம்

ஆகாயக் காவல் ஏவுகணை வாகனங்கள் (QRSAM) வாங்குவதற்காக ரூ.30 ஆயிரம் கோடி மதிப்பிலான அறிவிப்பை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது. ‘சிந்தூர்’ நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்க சீனமும் துருக்கியும் வழங்கிய ட்ரோன்களை பாகிஸ்தான் பயன்படுத்தியது.

அப்போது ஆகாய பாதுகாப்பு சாதனங்களை பயன்படுத்தி அவற்றை நம் ராணுவம் வானிலேயே சுட்டு வீழ்த்தியது. தற்போது எல்லைப் பிராந்தியத்தில் ஆகாய பாதுகாப்பு உபகரணங்களை அதிக அளவில் பயன்படுத்த ராணுவம் தீர்மானித்துள்ளது.

எதிரி நாடுகளின் போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்களை தடுக்க, ‘ஆனந்த் சாஸ்த்ரா’ என்ற ஆகாயக் காவல் ஏவுகணை அமைப்புடன் கூடிய வாகனத்தை (QRSAM), ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் (DRDO), பாரத் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பாரத் டைனமிக்ஸ் ஆகிய அரசுத் துறை நிறுவனங்கள் இணைந்து வடிவமைத்தன.

இதில் 360 டிகிரி ரேடார், ஜாமிங் பாதுகாப்பு, லாஞ்சர் மற்றும் ஏவுகணைகள் உள்ளன. இது 30 கி.மீ தூரத்திலும், 6 முதல் 10 கி.மீ உயரத்திலும் வரும் எதிரி போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை அழிக்கக்கூடியது.

எல்லைப் பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் ராணுவத்தின் பீரங்கி படையினருக்கு தேவையான ஆகாயக் காவலை வழங்க இந்த QRSAM வாகனங்கள் அவசியமாகின்றன. அதனால் 3 படைப் பிரிவுகளுக்குத் தேவையான ஆகாயக் காவல் ஏவுகணை வாகனங்களை தயாரித்து வழங்க, இந்திய ராணுவம் ரூ.30,000 கோடி மதிப்பில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு படைப் பிரிவிலும் 9 ஆகாயக் காவல் ஏவுகணை வாகனங்கள் இடம்பெறும்.

Facebook Comments Box