பிஹார் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு – 68.5 லட்சம் பேர் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன
பிஹார் மாநிலத்தின் இறுதி வாக்காளர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதில் மொத்தமாக 68.5 லட்சம் பேர் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
பிபிஹாரில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்காக, தேர்தல் ஆணையம் சிறப்பு தீவிர திருத்த நடைமுறையை அறிமுகப்படுத்தியது. இதன்படி அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களை சரிபார்த்தனர். இறந்தவர்கள், இடம் மாறியவர்கள் மற்றும் இரட்டை பதிவு கொண்டவர்கள் என 65 லட்சம் பேர் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
இதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர். பிஹார் வாக்காளர் ஆவணங்களில் ஆதார் அட்டை சேர்க்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினர். இதுகுறித்து தொடரப்பட்ட உச்சநீதிமன்ற வழக்கில், ஆதார் அட்டையை அரசு ஆவண பட்டியலில் இணைக்கும்படி தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.
சிறப்பு தீவிர திருத்தத்தின் பின்னர் ஏற்பட்ட சர்ச்சையைத் தொடர்ந்து, தற்போது இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. வரைவு பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் மற்றும் எழுப்பப்பட்ட ஆட்சேபனைகள் கருத்தில் கொண்டு இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. பிபிஹார் வாக்காளர்கள், voters.eci.gov.in என்ற இணையதளத்தில் சென்று தங்கள் பெயரைச் சரிபார்க்கலாம் என்று தேர்தல் ஆணையம் சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளது.
வரைவு பட்டியலுக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தில் கூடுதலாக 3.66 லட்சம் பேர் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இதனால் மொத்தமாக 68.5 லட்சம் பேர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில், புதிதாக 21.53 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதன் முடிவில் மொத்தம் 47 லட்சம் பேர் குறைந்துள்ளனர். கடந்த ஜூன் 24 நிலவரப்படி 7.89 கோடி இருந்த பிஹார் வாக்காளர்களின் எண்ணிக்கை தற்போது 7.42 கோடியாக குறைந்துள்ளது.
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி குறித்து தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிப்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.