நரசிம்மதாரிணி திருவுருவம் | நவராத்திரி பூஜை
அத்ரி முனிவரின் துணைவி அனுசுயாவை, மும்மூர்த்திகள் ஒரு சோதனைக்கு உட்படுத்தினர். ஒருநாள் அனுசுயா, தன் கணவருக்கு சேவை செய்து கொண்டிருந்தபோது, மும்மூர்த்திகள் முனிவர் வடிவில் அத்ரி முனிவரின் ஆசிரமத்திற்கு வந்து பிச்சை கேட்டனர். தன் கற்பின் பெருமையால் அவர்களை உணர்ந்த அனுசுயா, அவர்களை சிறுவர்களாக்கி உணவு அளித்தாள்.
மும்மூர்த்திகள் காணாமல் போனதால், அவர்களின் துணைவியரும் கவலைப்பட்டனர். எங்கு தேடுவது என்று யோசித்தபோது, நாரதர் அவர்கள் எங்கு உள்ளனர் என்று சொன்னார். உடனே அனுசுயாவின் குடிலுக்கு வந்த தேவியர், தங்கள் கணவர்கள் குழந்தைகளாக இருப்பதைப் பார்த்து கோபமுற்றனர். அப்போதுதான் அனுசுயாவின் கற்பின் வல்லமை உலகம் அறிய நாரதர் திட்டமிட்டிருந்தார். இரும்பால் செய்யப்பட்ட கடலைகளை அவித்துவருமாறு அனுசுயாவிடம் சொல்லி, அவற்றை முப்பெரும் தேவியரிடம் கொடுத்தார்.
இரும்பு கடலை எப்படிச் சமைவது? தேவியரால் சமைக்க முடியவில்லை. ஆனால் அனுசுயா அவற்றை நன்கு வேகவைத்து வந்தாள். அனுசுயா சுண்டல் செய்த தினமே சரஸ்வதி பூஜை நாள் எனப்படுகிறது. அதனால் அந்த நாளில் சுண்டல் சமர்ப்பிக்கிறோம். பின்னர் நவராத்திரியின் ஒன்பது நாள்களிலும் சுண்டல் படைப்பது வழக்கமாகியது.
நரசிம்மதாரிணியை வழிபட்டால் நமக்குப் பிடித்தவை அனைத்தும் கிடைக்கும். ராகு தோஷம் நீங்கும். எதிர்பாராத செல்வம், கீர்த்தி கிடைக்கும். ஒன்பது வயது சிறுமியை மகா கவுரி வடிவில் நவக்கிரக தேவியாக நினைத்து பூஜிக்க வேண்டும். முன்னதாக தாமரையினைப் போல அழகான கோலம் போட வேண்டும். புன்னாகவராளி, சங்கராபரணம் ராகங்களில் பாடல்கள் பாடி, மருதோன்றி, சம்பங்கி, வெண் தாமரை, இருவாட்சி மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். பால் சாதம், தேங்காய் சாதம், புளியோதரை, மொச்சை சுண்டல் ஆகியவற்றில் இயன்றதை நைவேத்தியமாக சமர்ப்பிக்க வேண்டும்.