“அதிகார ஆசையின் முடிவில்லா தாகம்” – கரூர் கூட்ட நெரிசல் குறித்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் வருத்தம்
கரூரில் தவெக கட்சி சார்பில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் விபத்து, பலரின் உயிரிழப்புக்கு காரணமாகியது. இதுகுறித்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது எக்ஸ் பதிவில் ஆழ்ந்த வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
அவரது பதிவில்,
“கரூரில் நடந்த கூட்ட நெரிசலில் பல அப்பாவிகள் உயிரிழந்த செய்தி எனக்கு மிகுந்த தனிப்பட்ட துயரத்தை ஏற்படுத்தியது. உண்மையாகவே என் மனதை உடைத்துவிட்டது. உயிரிழந்தோரின் குடும்பத்தினரும் நண்பர்களும் சாந்தியும் ஆறுதலும் பெற வேண்டும் என்று உள்ளம் கனிந்த விருப்பம். இந்த கொடூர சம்பவம் எனக்கு ஏற்படுத்திய மன உளைச்சல், கோபம் மற்றும் இயலாமையை சமாளிக்க சிறிது நேரம் தேவைப்பட்டதால் வருந்துகிறேன்.
அதிகாரத்திற்கான பேராசை, புகழுக்கான தீராத பசி, வெளிப்படைத்தன்மையற்ற அணுகுமுறை, மேலும் அதிகாரம் பெறவேண்டும் என்ற முடிவில்லா பேராவல்—இவை எல்லாம் நம்மை இன்றைய இந்த துயர நிலைக்கு இட்டுச் சென்றுள்ளன. நாம் ஒன்றிணைந்து வெளிப்படைத்தன்மை கொண்ட சூழலை உருவாக்கும் வரை இப்படியான விபத்துகள் தொடர்ந்து நிகழ வாய்ப்பு உள்ளது.
இன்றைய டிஜிட்டல் உலகில் மாற்றம் சாத்தியமானது. அந்த நிலையை அடையும் வரையில், வேறுபட்ட கருத்துகளை ஒதுக்கி வைப்போம். இந்த அப்பாவி உயிர்கள் சாந்தியடையட்டும். தயவுசெய்து உங்களை கவனித்துக்கொள்ளுங்கள். நான் உங்களை நேசிக்கிறேன்; உங்கள் ஆரோக்கியம் மற்றும் அமைதிக்காக பிரார்த்திக்கிறேன்” என்று சந்தோஷ் நாராயணன் குறிப்பிட்டுள்ளார்.