அக்.1–ல் ஆர்எஸ்எஸ் 100ஆவது ஆண்டு விழா: பிரதமர் மோடி தலைமை விருந்தினராக பங்கேற்பு

வரும் அக்டோபர் 1 ஆம் தேதி புதுடெல்லியில் நடைபெற உள்ள ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் நூற்றாண்டு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி தலைமை விருந்தினராக கலந்துகொள்ள உள்ளார்.

பிரதமர் அலுவலகம் வெளியிட்ட தகவலில், “ஆர்எஸ்எஸ் நிறுவப்பட்டு 100 ஆண்டு நிறைவையொட்டி நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இந்நிகழ்ச்சி புதுடெல்லி அம்பேத்கர் சர்வதேச மையத்தில் காலை 10.30 மணிக்கு தொடங்கும். இந்நிகழ்வில் ஆர்எஸ்எஸின் பங்களிப்புகளை முன்னிறுத்தும் வகையில் சிறப்பு அஞ்சல் தலை மற்றும் நினைவுத் நாணயம் வெளியிடப்படுவதுடன், பிரதமர் உரையாற்றுகிறார்” என்று கூறப்பட்டுள்ளது.

1925 ஆம் ஆண்டு, மகாராஷ்டிரா மாநில நாக்பூரில் டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார் தொடங்கிய இந்த அமைப்பு, தன்னார்வலர்களின் அடிப்படையில் இயங்கி, கலாச்சார விழிப்புணர்வு, ஒழுக்கம், சமூக பொறுப்புணர்வு மற்றும் சேவை போன்றவற்றை மக்களிடையே பரப்புவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது.

நாட்டை மறுசீரமைக்கும் பணியில் மக்களை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஆர்எஸ்எஸ், தர்ம அடிப்படையில் முன்னேற்றத்தை நோக்கி தொடர்ந்து இயங்கிவருகிறது. தேசியம், தேசபக்தி, ஒழுக்கம், தன்னம்பிக்கை, துணிவு, தலைமைத் திறன் ஆகிய பண்புகளை வளர்ப்பதே இதன் முதன்மை குறிக்கோள்.

கடந்த நூற்றாண்டில் கல்வி, சுகாதாரம், சமூக நலன், பேரிடர் மீட்பு போன்ற துறைகளில் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ள இவ்வமைப்பு, புயல், வெள்ளம், நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரிடர்களின் போது உடனடி நிவாரணம் மற்றும் மறுவாழ்வு பணிகளில் ஈடுபட்டுள்ளது. இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் ஆகியோருக்கு அதிகாரமளிக்கும் நோக்கில் பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து உள்ளூர் சமூக வளர்ச்சியில் பங்களித்து வருகிறது.

இந்நூற்றாண்டு விழா, ஆர்எஸ்எஸின் வரலாற்றுப் பயணத்தையும் அதன் சாதனைகளையும் கொண்டாடும் நிகழ்வாக அமைகிறது.

மேலும், கடந்த ஞாயிற்றுக்கிழமை மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்ததாவது:

“100 ஆண்டுகளுக்கு முன், ஆர்எஸ்எஸ் நிறுவப்பட்ட வேளையில், தேசம் பல நூற்றாண்டுகளாக அடிமைத்தனத்தின் பிடியில் சிக்கியிருந்தது. நமது சுயமரியாதையும் தன்னம்பிக்கையும் பாதிக்கப்பட்டிருந்தது. இதனால் தேசத்தின் விடுதலையுடன் சிந்தனைகளிலும் விடுதலை அவசியமாக இருந்தது.

அந்த சூழலில், டாக்டர் ஹெட்கேவார் 1925 ஆம் ஆண்டு விஜயதசமி நாளில் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தை தொடங்கினார். பின்னர் குருஜி அந்தப் பணியை முன்னெடுத்துச் சென்றார். இன்று, ஆர்எஸ்எஸ் நூறு ஆண்டுகளாக இடையறாது தேச சேவையில் ஈடுபட்டு வருகிறது. எந்த இயற்கைப் பேரிடரும் நேர்ந்தாலும், சுயம்சேவகர்கள் முதலில் சென்று உதவி செய்கிறார்கள்.

லட்சக்கணக்கான சுயம்சேவகர்களின் ஒவ்வொரு முயற்சியிலும் தேச சேவை என்ற உணர்வே முதன்மையாக உள்ளது. தங்களை அர்ப்பணித்துள்ள ஒவ்வொரு சுயம்சேவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்”* என்றார்.

Facebook Comments Box