‘மாமன்னன்’ படத்திற்கு பின், மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த படம் ‘பைசன் காளமாடன்’. இதில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், லால், பசுபதி, கலையரசன், ரஜிஷா விஜயன், ஹரி கிருஷ்ணன், அழகம் பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தீபாவளிக்கு இந்த படம் வெளியீடாக வருகிறது.
இப்படத்திற்கு இசையமைப்பாளராக நிவாஸ் கே. பிரசன்னா, ஒளிப்பதிவாளராக எழில் அரசு பணியாற்றியுள்ளனர். அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் பா. ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து இந்தப்படத்தை தயாரித்துள்ளன.
இந்தப்படம் குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் கூறியதாவது:
“‘பைசன்’ என் வாழ்க்கையில் முக்கியமான படம். கனமான, சிக்கலான கதையை சொன்னிருக்கிறேன்.
இந்தக் கதையைச் சொல்ல முயற்சிக்கும் போது அதுவே எனக்கு ஒரு பக்குவத்தை கொடுத்தது. இதில் கபடி வீரர் மணத்தி கணேசனின் கதையும், என் அனுபவங்களும், தென் தமிழக இளைஞர்களின் பதற்றமான வாழ்க்கைக் கதைகளும் இடம் பெற்றுள்ளன.
இந்தப்படத்திற்காக தன்னை எனக்கு முழுமையாக ஒப்படைத்த துருவ் விக்ரம், தயாரிப்பாளர் பா. ரஞ்சித், நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் என் நன்றி.
இந்தக் கதையை சாதாரணமாக, வழக்கமான சூட்டிங் போல எடுக்க முடியாது. ஒரு வருடம் பயிற்சி செய்து, கபடி வீரராகவும், கிராமத்து இளைஞனாகவும் மாற துருவ் கடுமையான உடல் உழைப்பைச் செய்தான். படம் தொடங்கிய சில நாட்களில் அவனால் முடியவில்லை. ரொம்ப கஷ்டப்பட்டான். அப்போது வேறு கதை செய்யலாமா என நான் கேட்டேன்.
ஆனால், அவன் ‘இல்லை, கஷ்டம் தான் இருக்கு. ஆனா நீங்க இந்தப் படம் செய்ய வெறியாக இருக்கீங்க. இது உங்களுக்குக் கனவு படம். நான் உங்களை அப்பா மாதிரி நம்பி வர்றேன். என்னைப் பார்த்துக்குவீங்க’ என்று சொன்னான். அந்த வார்த்தைகள் என்னை ஆழமாகத் தொட்ந்தன.
அவனை எதுவும் ஆகாமல் பாதுகாத்தேன். மற்றப் படங்களை விட அதிக உழைப்பு போட்டேன். துருவும் என்மீது முழுமையாக நம்பிக்கை வைத்தான். அவன் குடும்பமும் நம்பியது.
இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து பயிற்சி செய்து, படப்பிடிப்புக்கு நிறைய நாட்கள் ஒதுக்கி, முழுமையாக அர்ப்பணித்திருக்கிறார் துருவ். இப்படம் பார்ப்பவர்கள் அதன் அசல் தன்மையை உணர்வார்கள்.
என் நலன்விரும்பிகள் அனைவரும் படம் பார்த்துவிட்டு, ‘நீ சாதித்துட்ட, நினைச்சதை அடைஞ்சுட்ட’ என்று சொன்னார்கள்.
அவர்கள் மேலும், ‘தமிழ் சினிமாவின் பெரும் நம்பிக்கையாக துருவ் இருப்பார். அவரின் சினிமா வாழ்க்கை இப்போது தான் தொடங்குகிறது’ என்றும் தெரிவித்தனர். அதை கேட்டதும் எனக்கும் துருவுக்கும் மிகுந்த மகிழ்ச்சி. அதையே மக்கள் சொல்லும் நாளுக்காக காத்திருக்கிறேன்” என்றார் மாரி செல்வராஜ்.