500 பில்லியன் டாலரை எட்டவிருக்கும் எலான் மஸ்க்கின் செல்வம்!
போர்ப்ஸ் வெளியிட்ட உலகின் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு சுமார் 500 பில்லியன் டாலரை எட்டும் நிலையில் உள்ளது. ஒரே நாளில் அவரின் செல்வம் 8.3 பில்லியன் டாலர்கள் உயர்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் மூலம் உலகளவில் 500 பில்லியன் டாலரை அணுகும் முதல் நபராக மஸ்க் வரலாற்றில் இடம் பிடிக்கிறார். இந்திய நேரப்படி வியாழக்கிழமை இரவு 1.25 மணிக்கு, அவரது சொத்து மதிப்பு 499.5 பில்லியன் டாலராக பதிவாகி இருந்தது. இது போர்ப்ஸ் நிகழ்நேர பணக்காரர்கள் பட்டியலில் வெளியிடப்பட்டுள்ளது.
டெஸ்லா பங்குகள் உயர்வு இதற்குக் காரணமாகும். இந்த ஆண்டு இதுவரை டெஸ்லா பங்குகள் 14% உயர்ந்துள்ளன; புதன்கிழமையன்று மட்டும் 4% அதிகரித்துள்ளன. 54 வயதான மஸ்க், உலக பணக்காரர்கள் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். தற்போது டெஸ்லா, எக்ஸ், ஸ்பேஸ் எக்ஸ், நியூராலிங்க் போன்ற நிறுவனங்களை அவர் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.
இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில், ஆரக்கிள் நிறுவனர் லாரி எலிசன் 351.5 பில்லியன் டாலர் செல்வத்துடன் உள்ளார். அடுத்து, மார்க் ஸூகர்பெர்க் (245.8 பில்லியன்), ஜெஃப் பிசோஸ் (233.5 பில்லியன்), லாரி பேஜ் (203.7 பில்லியன்) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.