ஆப்கன் வெளியுறவு அமைச்சர் முத்தாகி அடுத்த வாரம் இந்தியா வருகை

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி பிடித்து நான்கு ஆண்டுகள் ஆன நிலையில், தலிபான் நிர்வாகத்தின் வெளியுறவு அமைச்சர் ஆமிர் கான் முத்தாகி அடுத்த வாரம் இந்தியாவுக்கு வரவுள்ளார்.

2021 ஆகஸ்ட் 15-ஆம் தேதி தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய பின்னர், அந்த அரசின் அமைச்சர் ஒருவர் இந்தியா வருவது இதுவே முதல் முறை.

வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்ததாவது: முத்தாகி அக்டோபர் 10-ஆம் தேதி இந்தியாவுக்கு வருகிறார். அப்போது, அத்தியாவசிய மருந்துகள் மற்றும் விவசாயப் பொருட்களின் பற்றாக்குறையால் அவதிப்படும் ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா வழங்கும் உதவிகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறும் எனக் கூறப்படுகிறது.

தற்போது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், முன்னணி தலிபான் தலைவர்களுக்கு பயணத் தடைகள் விதித்துள்ளது. எனவே அவர்கள் வெளிநாட்டு பயணங்களுக்கு அந்த கவுன்சிலின் விலக்கு பெற வேண்டும். கடந்த செப்டம்பர் 30 அன்று, ஐ.நா. தடைகள் குழு முத்தாகியின் இந்தியப் பயணத்துக்கு “தற்காலிக விலக்கு” வழங்கியது. இதனைத் தொடர்ந்து அவரது இந்திய வருகை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

முந்தைய காலங்களில் முத்தாகி பல இந்திய அதிகாரிகளைக் சந்தித்திருந்தாலும், தலிபான் அரசுக்கு இந்தியா இதுவரை சட்டபூர்வ அங்கீகாரம் வழங்கவில்லை. கடந்த ஜனவரி மாதம் துபாயில், வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரியை முத்தாகி சந்தித்து, ஈரானின் சாபஹார் துறைமுகம் உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து இருதரப்பும் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments Box