“என் ரசிகர்களுக்கு நன்றியுடன் இருக்கிறேன்” – அஜித் உணர்ச்சி பகிர்வு

நடிகர் அஜித், “என் ரசிகர்களுக்கு நான் பெரும் நன்றியுடன் இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவில் நடைபெற்று வரும் கார் பந்தயத்தில் அஜித் கலந்து கொண்டுள்ள நிலையில், தனியார் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:

“வரும் ஆண்டுகளில் பல சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்கத் திட்டமிட்டுள்ளேன். விளையாட்டுக்கும் இந்திய திரைப்படத் துறைக்கும் ஒரே அளவு முக்கியத்துவம் தரும் மனநிலையுடன் இருப்பவர்களைத் தேடிக்கொண்டிருக்கிறேன். திரைப்படத்தை விளம்பரப்படுத்த பல வழிகள் உள்ளன; அதில் மோட்டார் ஸ்போர்ட்ஸையும் ஒரு தளமாக பயன்படுத்த விரும்புகிறேன்.

உலகம் முழுவதும் விருதுகள், விழாக்கள் நடைபெறுகின்றன. சர்வதேச பார்வையாளர்களை இந்திய சினிமாவுக்கு அதிகம் ஈர்ப்பதே என் நோக்கம். இன்று கொரிய படங்கள் இந்தியாவில் பிரபலமாகியுள்ளன; அதுபோல இந்திய திரைப்படங்களும் உலகம் முழுவதும் பாராட்டப்பட வேண்டும். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், போஜ்புரி உள்ளிட்ட அனைத்து மொழி படங்களையும் மக்கள் ரசிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

என் ரசிகர்கள் என்னை ஊக்குவிப்பதில் மிகப்பெரிய பங்கு வகிக்கிறார்கள். பந்தயங்களைப் பார்ப்பதற்காக தூர இடங்களில் இருந்து வருகிறார்கள். துபாய், ஜெர்மனி, ஸ்பா-ஃபிராங்கோர்சாம்ப்ஸ் போன்ற இடங்களில் அவர்கள் ஆதரவு அளித்துள்ளனர். அடுத்த தொடர்களில் ‘இந்திய சினிமா’ என்று எழுதப்பட்ட சிறப்பு லோகோவுடன் பங்கேற்று இந்திய திரைப்படங்களை விளம்பரப்படுத்தவும் திட்டமிட்டுள்ளேன்.

20க்கும் மேற்பட்ட மொழிகளுடன், இந்தியா உலகின் மிகப்பெரிய திரைப்பட தயாரிப்பாளர்களில் ஒன்றாக உள்ளது. பொழுதுபோக்கும் விளையாட்டும் எப்போதும் மனித வாழ்க்கையின் அத்தியாவசிய அங்கமாக இருக்கின்றன. கோவிட் காலத்தில் அதுவே மக்களுக்கு உற்சாகம் தந்தது.

திரைப்படத் துறையில் 33 ஆண்டுகள் பணியாற்றியதில் நான் பெருமிதம் கொள்கிறேன். இதையெல்லாம் செய்யச் செய்தது என் ரசிகர்களின் அன்பும், நல்லெண்ணமும் தான்” என்று அஜித் தெரிவித்துள்ளார்.

Facebook Comments Box