சரிந்த தங்கம் விலை: பவுனுக்கு ரூ.880 வீழ்ச்சி
சென்னையில் இன்று (அக்.3) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.880 குறைந்து விற்பனைக்கு வந்துள்ளது. நேற்று மாலை ஒரு பவுன் தங்கம் ரூ.88,000-ல் இருந்த நிலையில் இன்று விலை குறைந்துள்ளது.
தங்க விலை சர்வதேச பொருளாதாரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, உக்ரைன்-ரஷ்யா போர் மற்றும் இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் போன்ற காரணிகளின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரி, டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பில் ஏற்படும் மாற்றம் ஆகியவையும் தங்க விலையை பாதிக்கின்றன.
கடந்த மாதம் 26-ம் தேதி முதல் தங்கம் விலை உயர்ந்து வந்தது. அக்.1-ம் தேதி விலை ஒரு பவுன் ரூ.87,600-ஐ எட்டியது. அக்.2-ம் தேதி காலை விலை பவுனுக்கு ரூ.560 குறைந்ததற்கு பிறகு, மாலை மீண்டும் அதே அளவு உயர்ந்தது. இன்று பவுனுக்கு ரூ.880 வீழ்ச்சியுடன் விலை விற்பனைக்கு வந்துள்ளது.
- 22 காரட் தங்கம்: கிராமுக்கு ரூ.110 குறைந்து, ஒரு கிராம் ரூ.10,840, பவுனுக்கு ரூ.880 குறைந்து, ஒரு பவுன் ரூ.86,720.
- 24 காரட் தங்கம்: பவுனுக்கு ரூ.960 குறைந்து, ஒரு பவுன் ரூ.94,608.
- வெள்ளி: கிராம் ஒன்றுக்கு ரூ.3 குறைந்து, ஒரு கிராம் ரூ.161, கிலோக்கு ரூ.3,000 குறைந்து, ரூ.1,61,000.