சோனம் வாங்சுக்கை விடுதலை செய்யக் கோரி மனைவி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்

லடாக்கை மாநில அந்தஸ்தில் சேர்க்க வலியுறுத்தி உண்ணாவிரதம் நடத்திய சமூக ஆர்வலரும் கல்வியாளருமான சோனம் வாங்சுக், செப்டம்பர் 26-ஆம் தேதி கைது செய்யப்பட்டு தற்போது ஜோத்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அவரை விடுவிக்கக் கோரி சோனம் வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி ஆங்மோ உச்ச நீதிமன்றத்தில் ஹீபியஸ் கார்ப்பஸ் மனு தாக்கல் செய்துள்ளார். “சோனம் வாங்சுக்கின் உடல்நிலை, அவர் எங்கு வைக்கப்பட்டுள்ளார், ஏன் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்பதற்கான எந்தத் தகவலும் எனக்கு இல்லை” என அவர் எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, செப்டம்பர் 24-ஆம் தேதி லடாக்கில் நடந்த வன்முறையில் 4 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து சோனம் வாங்சுக் கைது செய்யப்பட்டார். அவருக்குச் சொந்தமான ஹிமாலயன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஆல்டர்நேட்டிவ்ஸ் லடாக் (HIAL) நிறுவனம் வெளிநாடுகளிலிருந்து ரூ.1.5 கோடி நிதி முறைகேடாக பெற்றதாக மத்திய உள்துறை அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது. மேலும், அவர் பாகிஸ்தான் பயணம் செய்தது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

மத்திய அரசை கடுமையாக விமர்சித்திருந்த கீதாஞ்சலி, “இந்தியாவில் உண்மையில் சுதந்திரம் உள்ளதா? சில அதிகாரிகள் ஆயிரக்கணக்கான காவல்துறையினரை தவறாகப் பயன்படுத்தி லடாக்கில் மக்களை அடக்கி ஆளுகின்றனர்” எனக் கூறியிருந்தார்.

மேலும், சோனம் வாங்சுக்கை விடுதலை செய்யக் கோரி குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர் உள்ளிட்டோருக்கும் மனு அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments Box