ம.பி. குழந்தைகள் மரணத்திற்கு இருமல் சிரப் காரணமா? – 19 உற்பத்தி நிலையங்களில் தீவிர ஆய்வு

மத்தியப் பிரதேசத்தில் இருமல் சிரப் எடுத்துக்கொண்டதால் குழந்தைகள் உயிரிழந்ததாக புகாருகள் வந்ததைத் தொடர்ந்து, ஆறு மாநிலங்களில் உள்ள இருமல் சிரப் மற்றும் ஆன்டிபயாட்டிக் மருந்துகள் தயாரிக்கும் 19 உற்பத்தி நிலையங்களில் மத்திய மருந்து ஒழுங்குமுறை நிறுவனம் (CDSCO) ஆய்வுகள் தொடங்கியுள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் 9, மகாராஷ்டிராவில் 2, ராஜஸ்தானில் 1 குழந்தை ஆகியோர் இருமல் சிரப் உட்கொண்டதால் உயிரிழந்ததாக தகவல்கள் வந்துள்ளன. இதனையடுத்து, மருந்துகளின் தரத்தினைச் சோதித்து, எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்கும் முறைகளை பரிந்துரைக்க CDSCO ஆய்வுகளை அக்டோபர் 3-ஆம் தேதி தொடங்கியது.

மேலும், மத்தியப் பிரதேசம், சிந்த்வாரா மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் குழந்தைகள் இறப்புகளுக்கான காரணங்களை கண்டறிவதற்காக, தேசிய வைராலஜி நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம், CDSCO மற்றும் நாக்பூர் எய்ம்ஸ் உள்ளிட்ட பலதுறை நிபுணர்கள் குழு மாதிரிகள் மற்றும் காரணிகளை ஆராய்ந்து வருகிறது.

மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு பரிசோதித்த ஆறு மாதிரிகள் மற்றும் மத்தியப் பிரதேச உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (MPFDA) பரிசோதித்த 3 மாதிரிகளில் கடுமையான சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய டைஎதிலீன் கிளைக்கால் (DEG) மற்றும் எத்திலீன் கிளைக்கால் (EG) மாசுபாடுகள் இல்லாதவை என மத்திய சுகாதார அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

மத்தியப் பிரதேச அரசின் வேண்டுகோளின் பேரில், தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரேசன் பார்மா உற்பத்திப் பிரிவில் இருந்து சேகரிக்கப்பட்ட கோல்ட்ரிஃப் இருமல் சிரப் மாதிரிகளை தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை சோதனை செய்தது.

வெள்ளிக்கிழமை மாலை தாமதமாக முடிவுகள் பகிரப்பட்டதில், அந்த மாதிரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டி டைஎதிலீன் கிளைக்கால் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தமிழக அரசு அந்த கோல்ட்ரிஃப் இருமல் சிரப்பின் விற்பனையை தடை செய்து சந்தையில் இருந்து அகற்ற உத்தரவிட்டுள்ளது.

Facebook Comments Box