ஜப்பானின் முதல் பெண் பிரதமராகிறார் சனே தகைச்சி
ஜப்பானின் ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் (LDP) தலைவராக தேர்வாகியுள்ள சனே தகைச்சி, இம்மாத மத்தியில் நாட்டின் முதல் பெண் பிரதமராக பதவியேற்க உள்ளார்.
ஜப்பானில் ஆளும் கட்சியான லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் தலைவராகவும், பிரதமராகவும் இருந்த ஷிகெரு இஷிபா, ஒரு ஆண்டு பதவிக்காலத்துக்குப் பிறகு விலகுவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். இதையடுத்து, புதிய தலைவரைத் தேர்வு செய்வதற்கான கட்சித் தேர்தல் இன்று நடைபெற்றது.
இந்தத் தேர்தலில், சனே தகைச்சி மொத்தம் 589 வாக்குகளில் 183 வாக்குகள் பெற்று முதல் கட்டத்தில் முன்னிலை பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட கொய்சுமி 164 வாக்குகள் பெற்றார். மற்ற மூன்று போட்டியாளர்கள் முதல் கட்டத்திலேயே வெளியேற்றப்பட்டனர்.
இரண்டாவது கட்ட வாக்கெடுப்பில் கொய்சுமி சிறிய முன்னிலை பெற்றிருந்தாலும், இறுதிச் சுற்று வாக்கெடுப்பில் சனே தகைச்சி தீர்மான வெற்றியைப் பெற்றார். இதையடுத்து, அவர் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் புதிய தலைவராக முறைப்படி பொறுப்பேற்றார்.
கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இதன் மூலம், 64 வயதான வலதுசாரி சனே தகைச்சி, ஜப்பான் வரலாற்றில் முதல் பெண் பிரதமராக ஆவார்.
அவர் பதவியேற்கும் முன் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியிருக்கிறது. தற்போது LDP தலைமையிலான கூட்டணி குறைந்த பெரும்பான்மை மட்டுமே பெற்றுள்ளது. இருப்பினும், நம்பிக்கை வாக்கெடுப்பில் சனே தகைச்சி வெற்றி பெறுவார் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 70 ஆண்டுகளாக ஜப்பானின் ஆட்சியை பெரும்பாலும் கையில் வைத்திருக்கும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியில் இருந்து முதல்முறையாக ஒரு பெண் பிரதமராக இருப்பது வரலாற்றுச் சம்பவமாகும்.