கலைவாணர் அரங்கில் 15 நாள் தேசிய கைத்தறி கண்காட்சி: 50% வரை தள்ளுபடி சலுகை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னை கலைவாணர் அரங்கில் 15 நாட்கள் நடைபெறும் தேசிய கைத்தறி கண்காட்சி நேற்று தொடங்கியது. இந்த கண்காட்சியில் பல்வேறு கைத்தறி பொருட்கள் 50 சதவீதம் வரை தள்ளுபடியில் விற்பனை செய்யப்படுகின்றன.

கைத்தறி துணி வகைகளின் விற்பனையை ஊக்குவிக்கும் நோக்கில் கைத்தறி துறை ஏற்பாடு செய்துள்ள இந்தக் கண்காட்சியை, அமைச்சர்கள் ஆர்.காந்தி, பி.கே. சேகர்பாபு மற்றும் மா.சுப்பிரமணியன் ஆகியோர் இணைந்து நேற்று திறந்து வைத்தனர்.

இக்கண்காட்சியில் கைத்தறி நெசவாளர்களின் தனித்துவமான கைவண்ணங்களால் உருவான பேஸ்டல் கலெக்ஷன்கள், பூம்பட்டு, புதுமணப்பட்டு, பட்டு நூல் டிசைனர் சேலைகள், கட்டம் பட்டு, வெண்ணிலா கலெக்ஷன்ஸ், அனுதினப்பட்டு, பருத்தி நூல் யோகா மேட், தர்ப்பை புல் யோகா மேட், தாய்-சேய் பெட்டகம் போன்ற புதிய வடிவமைப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

இந்நிகழ்வில் 300-க்கும் மேற்பட்ட தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள், வெளிமாநில நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் மத்திய, மாநில நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.

பிரபல பட்டு மற்றும் பருத்தி சேலைகள் காட்சியில்

கண்காட்சியில் காஞ்சிபுரம், திருபுவனம், ஆரணி போன்ற இடங்களில் தயாரிக்கப்படும் பட்டு சேலைகள், சேலம் வெண்பட்டு வேட்டிகள், அருப்புக்கோட்டை, நெகமம், செட்டிநாடு, மதுரை சுங்குடி, காஞ்சி காட்டன், பரமக்குடி புதினம் போன்ற பருத்தி சேலைகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், சென்னிமலை மற்றும் கரூர் தயாரிப்பு படுக்கை விரிப்புகள், ஏற்றுமதி தரத்திலான பொருட்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், பனாராஸ், டசர், பைத்தானி, போச்சம்பள்ளி, மைசூர் பட்டு சேலைகள், பெங்கால் காட்டன், வெங்கடகிரி காட்டன், ஒடிசா இக்கட், சந்தேரி, தந்துஜா, மிருக்னாயினி சேலைகள், ஜம்மு காஷ்மீர் சால்வைகள் போன்ற வெளிமாநில கைத்தறி பொருட்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்தக் கண்காட்சி அக்டோபர் 17 வரை, தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும்.

30% முதல் 50% வரை தள்ளுபடி

தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் தயாரிப்புகளுக்கு 30% முதல் 50% வரை சிறப்பு தள்ளுபடி வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் எம்.பி. தயாநிதி மாறன், சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் எம். மகேஷ் குமார், கைத்தறித் துறை செயலர் வே. அமுதவல்லி, இயக்குநர் மகேஸ்வரி ரவிக்குமார், கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கவிதாராமு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Facebook Comments Box