உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிநவீன ரோந்துக் கப்பல் இந்திய கடலோர காவல் படைக்கு அர்ப்பணிப்பு

இந்திய கடலோர காவல் படைக்காக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிநவீன ரோந்துக் கப்பல் ‘அக் ஷர்’, காரைக்காலில் நடந்த விழாவில் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. காரைக்கால் மையத்தின் செயல்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில், கோவாவில் தயாரிக்கப்பட்ட இந்த புதிய கப்பல் காரைக்கால் துறைமுக வளாகத்தில் நாட்டுக்கு ஒப்படைக்கப்பட்டது.

மத்திய பாதுகாப்புத் துறை கூடுதல் செயலர் தீப்தி மொஹில் சாவ்லா, விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து, “அக் ஷர் ரோந்துக் கப்பல் இந்திய கடலோர காவல் படையின் செயல்திறனை பலகுணமாக மேம்படுத்தும். 60 சதவீதம் உள்நாட்டுப் பொருட்கள் மற்றும் தளவாடங்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது. நாட்டின் 11,000 கி.மீ. கடலோரத்தில் பாதுகாப்பு, மீனவர்கள் பாதுகாப்பு, கடல்வழி கடத்தல் தடுப்பு, ஊடுருவல் தடுப்பு, கடல் சூழல் பாதுகாப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகள் போன்ற பணிகளில் கப்பல் முக்கிய பங்கு வகிக்கும்,” எனத் தெரிவித்தார்.

விழாவில் கடலோர காவல் படை கூடுதல் இயக்குநர் ஜெனரல் கமாண்டர் டோனி மைக்கேல், காரைக்கால் மைய கமாண்டன்ட் சவுமய் சந்தோலா, புதிய ரோந்துக் கப்பல் கமாண்டன்ட் சுபேந்து சக்கரபோர்தி, காரைக்கால் ஆட்சியர் ரவி பிரகாஷ், மாவட்ட எஸ்.எஸ்.பி. லட்சுமி சவுஜன்யா, நாகை எஸ்.பி. செல்வகுமார் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

கப்பல் சிறப்பம்சங்கள்:

  • எடை: 320 டன்
  • நீளம்: 51 மீட்டர்
  • வேகம்: மணிக்கு 27 நாட்டிக்கல் மைல்
  • ஆயுதங்கள்: 30 எம்எம் சிஆர்என்-91 துப்பாக்கிகள், ரிமோட் மூலம் இயக்கக்கூடிய இயந்திர துப்பாக்கிகள், தானியங்கி மின் சாதனங்கள்
  • பல்வேறு நவீன அம்சங்கள் கொண்டு உருவாக்கப்பட்டது
Facebook Comments Box