டார்ஜிலிங்கில் கனமழை காரணமாக நிலச்சரிவு: 9 பேர் பலி – மீட்பு பணியில் NDRF

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் 9 பேர் உயிரிழந்தனர்; மேலும் பலர் காணாமலாக உள்ளனர். இதனால், பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

கடந்த மாதங்களில் டெல்லி, பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், ஹிமாச்சல் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் போன்ற பகுதிகளில் கனமழை மற்றும் நிலச்சரிவில் பலர் உயிரிழந்த நிலையில், தற்போது மேற்குவங்க மாநிலத்தில் மிக அதிகமழை பெய்து வருகிறது. இதன் தாக்கம் டார்ஜிலிங்க், கலிம்பாங், கூச்பெஹார், ஜல்பைகுரி உள்ளிட்ட மலைப் பகுதிகளில் கடுமையாக உள்ளது.

நிலச்சரிவு மிரிக் – சுகியாபோக்ரி சாலையில் ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகள் மற்றும் சாலைகள் மண்ணில் புதைந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. தொலைத் தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டதால், நிலவரத்தை முழுமையாக அறிய முடியாமல் உள்ளது.

மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள்:

டார்ஜிலிங் மாவட்ட நிர்வாக அதிகாரி கூறியதாவது, “மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக நடக்கின்றன. உள்ளூர் நிர்வாகம், காவல்துறை மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.”

தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் இதுவரை 9 இறப்புகளை உறுதி செய்துள்ளனர்; மேலும் 2 பேரை தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பகுதிகள்: சார்ஸ்லே, ஜெஸ்பீர்கான், மிரிக் பஸ்தி, தார் கான், மிரிக் லேக் ஏரியா. கார் பகுதியில் மட்டும் மண்ணில் புதைந்த 4 பேரை மீட்கப்பட்டுள்ளது.

ரெட் அலர்ட்:

மேற்கு வங்கம், டார்ஜிலிங்க், கலிம்பாங் பகுதிகளில் அக்.6 வரை கனமழை அதிகரிக்கும் வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. நிலச்சரிவுகள் மேலும் பல இடங்களில் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

சுற்றுலாப் பயணிகள் பாதிப்பு:

தசரா விடுமுறையைக் கொண்டாட டார்ஜிலிங்குக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்த நிலையில், நிலச்சரிவு காரணமாக அவர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அவசர உதவிக்காக காவல் கட்டுப்பாட்டு அறை 91478 89078 என்ற தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி இரங்கல்:

இந்த நிலச்சரிவில் உயிரிழந்தோருக்கு பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்:

“டார்ஜிலிங்கில் நிலச்சரிவில் பலர் உயிரிழந்தது மிகவும் வருத்தமளிக்கிறது. தங்களின் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருக்கும் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமாகட்டும். கனமழை மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையான உதவியையும் நாங்கள் வழங்க விரும்புகிறோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Facebook Comments Box