“மூன்று கேப்டன்கள் என்ற நடைமுறை சாத்தியமில்லை” – தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர் விளக்கம்

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த முடிவுக்கான காரணத்தை தேசிய அணித் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர் விளக்கியுள்ளார்.

விரைவில் நடைபெறவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்க்கான அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. இதில் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இடம்பெறவில்லை.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் ரோஹித் தலைமையிலான இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது. பின்னர் அவர் மற்றும் கோலி இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். இதற்கு முன்பே டி20 உலகக்கோப்பைக்கு பின் அதே தீர்மானத்தை எடுத்திருந்தனர். இதன் தொடர்ச்சியாக ரோஹித் சர்மா ஒருநாள் அணித் தலைமையிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அஜித் அகர்கர் கூறியதாவது:

“மூன்று வடிவங்களுக்கு மூன்று தனித்தனியான கேப்டன்களை நியமிப்பது சாத்தியமில்லை.

2027 உலகக்கோப்பைக்கு இன்னும் காலம் உள்ளது. ஒருநாள் கிரிக்கெட் இப்போது குறைந்த அளவில் நடைபெறுகிறது. எனவே இளம் கேப்டனுக்கு அனுபவம் சேர்க்கும் நேரம் கிடைக்க வேண்டும். அதற்காகவே கில் தேர்வாகியுள்ளார்.”

அவர் மேலும் கூறியதாவது,

“இந்திய அணி கடைசியாக மார்ச் மாதத்தில் ஒருநாள் போட்டி விளையாடியது. அதன்பிறகு அக்டோபர் 19ஆம் தேதி தான் மீண்டும் களமிறங்குகிறது. இங்கிலாந்து தொடரில் ஷுப்மன் கில் அழுத்தம் மிக்க தருணங்களில் சிறப்பாக விளையாடினார். அவரது புள்ளிவிபரங்கள் அதை உறுதிப்படுத்துகின்றன. அதனால் தான் அவரை நம்பிக்கையுடன் கேப்டனாக நியமித்தோம்.”

26 வயதான ஷுப்மன் கில் இதுவரை இந்தியாவுக்காக 55 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 2,775 ரன்கள் எடுத்துள்ளார். அவரின் பேட்டிங் சராசரி 59.04 ஆகும். இதில் 8 சதங்கள் மற்றும் 15 அரைசதங்கள் பதிவு செய்துள்ளார்.

Facebook Comments Box