நவக்கிரக தோஷம் நீக்கும் குடந்தை ஸ்ரீ பகவத் விநாயகர் – ஞாயிற்றுக்கிழமை சிறப்பு தரிசனம்

மூலவர்: ஸ்ரீ பகவத் படித்துறை விநாயகர்

தல வரலாறு:

வேதாரண்யத்தில் வாழ்ந்த ஸ்ரீ பகவர் மகரிஷி, தன் சீடருடன் தவமிருந்து வந்தார். ஒரு நாள், அவருடைய தாய் மரணமடையும் முன், “என் அஸ்திகளை கலசத்தில் சேகரித்து புனித தலங்களுக்கு எடுத்துச் செல். எங்கு அவை மலர்களாக மாறுகிறதோ, அந்த இடத்தில் ஓடும் புனிதநதியில் கரைத்துவிடு” என்று மகனிடம் கூறிவிட்டு உயிர் நீத்தார்.

தாயின் ஆணையை மதித்து, ஸ்ரீ பகவர் தன் சீடருடன் தீர்த்தயாத்திரை மேற்கொண்டார். அவர்கள் குடந்தை (கும்பகோணம்) வந்து காவிரி நதியில் நீராடியபோது, சீடன் பசியால் கலசத்தை திறந்து பார்த்தான். அதில் அஸ்தி மலர்களாக மாறியிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தும், எதுவும் சொல்லாமல் அதை மூடிவைத்தான்.

காசியில்தான் அஸ்தி மலரும் என நம்பிய குரு, அங்கு மலராததை கண்டு ஆச்சரியமடைந்தார். பின்னர் சீடர் குடந்தையில் நடந்ததை விளக்க, குரு அங்கு வந்து காவிரியில் நீராடி, அஸ்தி மலர்களாக மாறியிருப்பதை கண்டார். இதனால் மகிழ்ந்து, அஸ்தியை அங்கேயே கரைத்து வைத்தார்.

அவ்வாறு, குடந்தை காசியை விட புனிதமான தலம் என்று உணர்ந்த பகவர், அங்கிருந்த விநாயகரை வணங்கினார். அதனால் அந்த விநாயகருக்கு “ஸ்ரீ பகவத் விநாயகர்” என்ற பெயர் கிடைத்தது.

சிறப்பம்சம்:

இங்கு விநாயகர் நவக்கிரகங்களின் சக்தியுடன் விளங்குகிறார் —

நெற்றியில் சூரியன், நாபியில் சந்திரன், வலது தொடையில் செவ்வாய், வலது கீழ்க்கையில் புதன், சிரசில் வியாழன், இடது கீழ்க்கையில் சுக்கிரன், வலது மேல் கையில் சனி, இடது மேல் கையில் ராகு, இடது தொடையில் கேது ஆகியோர் குடி கொண்டுள்ளனர். இதனால் நவக்கிரக தோஷம் நீங்கும் தலம் என மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

இடம்: குடந்தை பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 1 கிலோமீட்டர் தொலைவில், மடத்துத் தெருவில் அமைந்துள்ளது.

தரிசன நேரம்: காலை 6.00 – 12.00 மணி மற்றும் மாலை 4.00 – 8.00 மணி வரை.

Facebook Comments Box