கம்பீருக்கு ‘ஆமாஞ்சாமி’ சொன்னால் தான் அணியில் இடம்: ஸ்ரீகாந்த் கடுமையான விமர்சனம்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 அணித் தேர்வில் ஹர்ஷித் ராணா சேர்க்கப்பட்டதை முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கடுமையாக சாடியுள்ளார். கம்பீருக்கு “ஆமாஞ்சாமி” சொல்லுபவர்களுக்கு மட்டுமே அணியில் இடம் கிடைக்கிறது என்று அவர் கிண்டலாகக் கூறியுள்ளார்.
அதேபோல, ஒருநாள் அணியில் சஞ்சு சாம்சனுக்கு பேக்-அப் விக்கெட் கீப்பர் வாய்ப்பு வழங்கப்படாததும் அவரை கடும் அதிருப்தியடையச் செய்தது. வீரர்களிடையே பாதுகாப்பு உணர்வு இல்லாமல், மாற்றி மாற்றி தேர்வு செய்வதால் அணியில் குழப்பம் நிலவுகிறது. நன்றாக ஆடுபவர்களுக்கு வாய்ப்பு இல்லை; ஆடாதவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது — இது எப்படிச் சரி என அவர் கேள்வி எழுப்பினார்.
நவம்பர் 2024-ல் மூன்று வடிவங்களிலும் அறிமுகமான ஹர்ஷித் ராணா, சமீபத்திய ஆசியக் கோப்பை வெற்றி அணியில் இருந்தார். இப்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெள்ளைப்பந்து தொடரில் நான்கு வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தனது யூடியூப் சேனலில் ஸ்ரீகாந்த் கூறியதாவது:
“இப்படி தொடர்ச்சியாக அணித் தேர்வு நடந்தால் வீரர்கள் முழுமையாக குழம்பி விடுவார்கள். நாள்தோறும் நாமே ‘அடுத்த அணியில் யார் இருப்பார்கள்’ என்று யூகிக்க வேண்டிய நிலை. யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒருநாள் உள்ளார், மறுநாள் இல்லை. ஒரே நிலையான வீரர் ஹர்ஷித் ராணா மட்டுமே — அவர் ஏன் அணியில் உள்ளார் என்று யாருக்கும் தெரியவில்லை.
வீரர்களை எடுத்து விட்டு விடுவது, மீண்டும் சேர்ப்பது போன்ற அணுகுமுறையால் அவர்களின் தன்னம்பிக்கை குறைகிறது. சிலர் நன்றாக ஆடினாலும் புறக்கணிக்கப்படுகிறார்கள்; சிலர் மோசமாக ஆடினாலும் இடம் பிடிக்கிறார்கள். இப்போது அணியில் இடம் வேண்டுமெனில் கம்பீருக்கு ‘ஆமாஞ்சாமி’ சொல்ல வேண்டும் போலிருக்கிறது.
2027 உலகக் கோப்பைக்கு அணியை தயார் செய்ய வேண்டிய நேரம் இது. ஆனால் இவர்கள் தேர்வு செய்யும் முறை அதை காட்டவில்லை. ஹர்ஷித் ராணா, நிதிஷ் குமார் ரெட்டி போன்றவர்களை உத்தேச அணியில் சேர்த்தால், உலகக் கோப்பை கனவு முடிந்து விடும்.
ஹர்ஷித் ராணா சினிமா மாதிரி நடிப்பதிலேயே அதிகம் கவனம் செலுத்துகிறார். பந்துவீச்சில் திறமை இல்லையெனில் இந்த நடிப்பு பயனில்லை. ஐபிஎல்லிலும் அவர் ஷோ ஆட்டத்தில் ஈடுபட்டார். பந்து தாண்டிய பிறகு டைவ் அடிப்பது — இது விளையாட்டு உணர்வு அல்ல, வெறும் ஷோ ஆஃப். ஆக்ரோஷம் வேறு, ஆட்டம் நடிப்பது வேறு,” என ஸ்ரீகாந்த் கடுமையாகக் கூறியுள்ளார்.