ஜிஎஸ்டி 2.0 வரி குறைப்பால் நவராத்திரி விற்பனை வெடித்து எழுந்தது!
நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி மற்றும் தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் மக்களின் நுகர்வு விறுவிறுப்பாக இருக்கும். ஆண்டு முழுவதும் நடைபெறும் மொத்த விற்பனையில் 40–45 சதவீதம் இந்த பண்டிகை காலத்தில் மட்டுமே இடம்பெறும் என்பது வழக்கம்.
இந்த ஆண்டு, ஜிஎஸ்டி 2.0 திட்டத்தின் கீழ் வரி குறைப்பு அறிவிக்கப்பட்டதால் கார்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களின் விலை குறைந்தது. இதன் தாக்கமாக மக்கள் வாங்கும் மனோபாவம் பல மடங்கு உயர்ந்துள்ளது. குறிப்பாக, வாகன விற்பனையில் அதிரடியான வளர்ச்சி பதிவாகியுள்ளது.
நவராத்திரியின் முதல் நாளில் மட்டும் மாருதி சுசுகி நிறுவனம் 30,000 கார்களை விற்றது. எட்டு நாட்களில் மொத்தம் 1.65 லட்சம் கார்களை விற்பனை செய்ததாக நிறுவனம் தெரிவித்துள்ளது. பண்டிகை முடிவடையும் முன் 2 லட்சம் முன்பதிவுகளை கடக்கும் எனவும் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். கடந்த ஆண்டு இதே காலத்தில் 85,000 வாகனங்களே விற்பனையாகியிருந்தன.
மகேந்திரா & மகேந்திரா நிறுவனத்தின் விற்பனை 60% உயர்ந்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 50,000 வாகனங்களை விற்றுள்ளது.
ஹூண்டாய் நிறுவனத்தின் மொத்த விற்பனை 72% அதிகரித்துள்ளது.
இதேபோல் இருசக்கர வாகன விற்பனையும் பெரிதும் உயர்ந்துள்ளது. வரி குறைப்பால் நுகர்வோர் நம்பிக்கை அதிகரித்திருப்பதால், வாகனங்கள் மட்டுமல்லாமல் மின்சாதனங்கள், மொபைல்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களின் விற்பனையிலும் சாதனை வளர்ச்சி பதிவாகி வருகிறது.
இந்த பண்டிகை சீசன் இந்திய வர்த்தகத்திற்கும் உற்பத்தியாளர்களுக்கும் புதிய நம்பிக்கையையும் ஊக்கத்தையும் அளித்துள்ளது.