“இது என்னை பாதிக்காது” — தன் மீது காலணி வீசப்பட்ட சம்பவம் குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் கருத்து

உச்ச நீதிமன்றத்தில் இன்று ஏற்பட்ட பரபரப்பான சம்பவத்தில், தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது ஒரு வழக்கறிஞர் காலணி வீச முயன்றார். ஆனால் அந்த காலணி நீதிபதி அமர்வின் முன்னே விழுந்ததால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

இந்த சம்பவம் நீதிமன்றத்தில் சிறிது நேரம் பதட்டத்தை ஏற்படுத்தியபோதும், தலைமை நீதிபதி கவாய் முழுமையாக அமைதியுடன் இருந்து, “இவை எல்லாம் என்னைப் பாதிக்காது. விசாரணையைத் தொடருங்கள்” என்று கூறி நீதிமன்ற நடவடிக்கைகளை வழக்கம்போல் தொடர்ந்து நடத்தினார்.

சம்பவத்தின் விவரம் பின்வருமாறு:

தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு ஒரு வழக்கை விசாரித்துக்கொண்டிருந்தபோது, வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் திடீரென காலணியை வீசினார். அந்த காலணி நீதிபதியைச் சென்றடையாமல், மேசையின் முன்பாக விழுந்தது. உடனடியாக நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் அந்த வழக்கறிஞரை வெளியே அழைத்துச் சென்றனர்.

அப்போது ராகேஷ் கிஷோர், “சனாதன தர்மத்தை அவமதிப்பதை இந்தியா பொறுத்துக்கொள்ளாது” என்று கூச்சலிட்டார். இதனையடுத்து அவர் உடனடியாக கைது செய்யப்பட்டார்.

பின்னர், தலைமை நீதிபதி கவாய் எந்தவித கலக்கம் காட்டாமல், நீதிமன்ற அமர்வை தொடர்ந்து நடத்தினார். அவர் கூறியதாவது:

“இதனால் நாம் திசைதிருப்பப்படக் கூடாது. இவை எல்லாம் என்னைப் பாதிக்காது. விசாரணையைத் தொடருங்கள்.”

சம்பவத்திற்குப் பிறகு, தலைமை நீதிபதி நீதிமன்ற பொதுச் செயலாளர் மற்றும் பாதுகாப்பு பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

விசாரணையில், ராகேஷ் கிஷோர் 2011 முதல் வழக்கறிஞர் சங்கத்தின் உறுப்பினராக இருப்பது தெரியவந்தது. மேலும், அவர் இந்த செயலை மேற்கொண்டது, மத்தியப் பிரதேசத்தில் சேதமடைந்த விஷ்ணு சிலையை மீட்டெடுப்பது தொடர்பாக தலைமை நீதிபதியின் முன்னைய கருத்துக்கு எதிர்ப்பாக எனவும் தெரியவந்துள்ளது.

அந்த வழக்கில், மனுதாரர் கோரியதை தள்ளுபடி செய்தபோது, தலைமை நீதிபதி கவாய்,

“இது விளம்பர நோக்கம் கொண்ட மனு. நீங்கள் விஷ்ணுவின் தீவிர பக்தர் என்றால், அவரிடமே பிரார்த்தனை செய்யுங்கள்,”

என்று கூறியிருந்தார்.

இந்த கருத்து சமூக ஊடகங்களில் பரவலாகப் பரவியதுடன், சில வட்டாரங்களில் விமர்சனங்களையும் கிளப்பியது. இதற்கு விளக்கம் அளித்த தலைமை நீதிபதி கவாய்,

“என் கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. அனைத்து மதங்களையும் நான் மதிக்கிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.

Facebook Comments Box