பாகிஸ்தானை 88 ரன்களில் வீழ்த்தியது ஹர்மன்பிரீத் தலைமையிலான இந்தியா — மகளிர் உலகக் கோப்பையில் இரண்டாவது வெற்றி

நடப்பு மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஹர்மன்பிரீத் கௌர் தலைமையிலான இந்திய அணி, பாகிஸ்தானை 88 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, தொடரில் தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி தொடங்கியது. இதில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்று, ரவுண்ட் ராபின் முறையில் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. தொடரின் முதல் ஆட்டத்தில் இந்தியா, இலங்கையை டிஎல்எஸ் முறையில் 59 ரன்களில் வென்றது.

அதன்பின் நேற்று (அக். 5) நடைபெற்ற போட்டியில், இந்தியா பாகிஸ்தானை எதிர்கொண்டது. கொழும்பில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் டாஸ் வென்று முதலில் பந்து வீசத் தீர்மானித்தது.

இந்திய அணிக்காக பிரதிகா ராவல் மற்றும் ஸ்மிருதி மந்தனா ஓப்பனராக களமிறங்கினர். ஸ்மிருதி 23 ரன்களிலும், பிரதிகா 31 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து ஹர்மன்பிரீத் (19), ஹர்லீன் (46), ஜெமிமா (32), ஸ்னே ராணா (20), தீப்தி (25) ஆகியோர் பயனுள்ள ரன்கள் சேர்த்தனர். கடைசியில் ரிச்சா கோஷ் 20 பந்துகளில் 35 ரன்கள் அடித்து இந்தியா 50 ஓவர்களில் 247 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

248 ரன்கள் இலக்காக களமிறங்கிய பாகிஸ்தான் அணி தொடக்கத்திலேயே தடுமாறியது. 26 ரன்களுக்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் ஸித்ரா அமீன் (81) மற்றும் நட்டாலியா பர்வேஸ் (33) அணியை தாங்க முயன்றாலும், மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இறுதியில் பாகிஸ்தான் அணி 43 ஓவர்களில் 159 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியாவின் கிரந்தி கவுட் 10 ஓவர்களில் வெறும் 20 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தி, ‘பிளேயர் ஆஃப் தி மேட்ச்’ விருதை வென்றார்.

தற்போது இந்திய அணி இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. எனினும், இந்திய அணி பேட்டிங்கில் ஸ்ட்ரைக் ரொட்டேஷனிலும், பீல்டிங்கில் சில தவறுகளிலும் மேம்பாடு தேவை என நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Facebook Comments Box