ஜெய்ப்பூர் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 6 பேர் உயிரிழப்பு
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட பெரும் தீவிபத்தில் 6 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். ஜெய்ப்பூரில் உள்ள சவாய்மான் சிங் (எஸ்எம்எஸ்) அரசு மருத்துவமனையில் பல நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில், மருத்துவமனையின் இரண்டாவது மாடியில் அமைந்திருந்த தீவிர சிகிச்சைப் பிரிவில் நேற்று முன்தினம் இரவு திடீரென தீப்பிடித்தது. சில நிமிடங்களில் தீ மற்ற பிரிவுகளுக்கும் பரவியதால், நோயாளிகளும் அவர்களது உறவினர்களும் அலறியடித்து வெளியே ஓடினர்.
தீவிபத்து குறித்து தகவல் அறிந்ததும், தீயணைப்புத்துறை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் நான்கு மணி நேரம் போராடிய பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இந்த விபத்தில் சிக்கி, சிகிச்சைப் பெற்று வந்த 2 பெண்கள் மற்றும் 4 ஆண்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தீவிபத்தில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த விலைமதிப்புள்ள மருத்துவ உபகரணங்கள் எரிந்து நாசமாயின.
முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாகவே இந்த தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
தீவிபத்து குறித்து தகவல் அறிந்ததும், ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா, மாநில அமைச்சர்கள் ஜோகராம் படேல் மற்றும் ஜவஹர் சிங் பெதம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று நிலைமையை பார்வையிட்டனர். காயமடைந்தவர்களுக்கு முதல்வர் ஆறுதல் தெரிவித்தார்.
இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.