கருப்பு வெள்ளை குற்றங்கள் | ஹாலிவுட் மேட்னி

“சினிமா என்பது கலைக்கும் வாழ்க்கைக்கும் இடையிலான ஒன்று,” என்று கூறுகிறார் பிரெஞ்சு புதிய அலை இயக்கத்தின் முன்னோடி கோதார்த். அவர் சொல்வது போல, கலைக்கும் வாழ்க்கைக்கும் இடையே உருவாகும் பல அனுபவங்களே சினிமாவாக மாறுகின்றன. அந்த இடைவெளியில் உருவான திரைப்படங்கள் சில கற்பனையாகவும் சில உண்மையோடு கலந்ததாகவும் அமைகின்றன. அவ்வகையில், 1930 முதல் 1960 வரையிலான “எட்ஜ் ஆஃப் தி சீட்” எனப்படும் கிளாசிக் குற்றத் திரைப்படங்களை பற்றி எழுதியுள்ளார் இயக்குநர் ராம்குமார் சுப்பாராமன்.

சினிமா ரசிகர்களுக்கு எப்போதும் புதுமையிழக்காதவை காதல் கதைகள். ஆனால் அதற்கு இணையாக ரசிகர்களை கவர்வது சஸ்பென்ஸ், த்ரில், மர்மம் கலந்த குற்றத் திரைப்படங்கள். தமிழ்ச் சினிமாவில் திகம்பர சாமியார், அந்தநாள், புதிய பறவை, அதே கண்கள் போன்ற படங்கள் கலைநயத்துடன் விறுவிறுப்பையும் வழங்கின. அவை இன்றும் புதுமையை இழக்கவில்லை.

அப்படிப்பட்ட துப்பறியும் வகை படங்களுக்கு முன்மாதிரியாக இருக்கும் THE THIN MAN SERIES (1934–1947) பற்றி முதலில் பார்க்கலாம். வில்லியம் பாவெல் (William Powell) மற்றும் மிர்னா லாய் (Myrna Loy) ஆகியோர் தம்பதியராக நடித்த படங்களின் தொடர் இது. இவர்களது திரை kemistry அற்புதமானது. அப்போதைய ரசிகர்கள் உண்மையிலேயே இவர்கள் தம்பதிகள் என நம்பினர். காமெடி, ரொமான்ஸ், மர்மம் — மூன்றையும் கலந்த அழகிய ஜோடி.

இவர்கள் 14 படங்களில் சேர்ந்து நடித்திருந்தாலும், இந்த 6 “Thin Man” படங்கள் ஹாலிவுட் வரலாற்றில் தனித்த இடம் பெற்றுள்ளன. “Golden Age of Hollywood Couple” என்று இன்றும் குறிப்பிடப்படுகிறார்கள்.

நிக் சார்லஸ் – வில்லியம் பாவெல்

ஓய்வு பெற்ற டிடெக்டிவ். ஒல்லியான உடல்வாகு, துல்லியமான வசன உச்சரிப்பு, சீரியஸும் நகைச்சுவையும் ஒன்றாக கலந்து வரும் நடிப்பு. சீரியஸான காட்சிகளுக்குள்ளும் அவர் தரும் நகைச்சுவை ரியாக்ஷன்கள் படத்தின் சுவையை அதிகரிக்கும்.

நோரா சார்லஸ் – மிர்னா லாய்

சுறுசுறுப்பான அழகி. மென்மையான முகபாவனைகள், கண்ணைச் சுருக்கும் சின்னச் சின்ன ‘ரியாக்ஷன்கள்’ — எல்லாம் பார்வையாளர்களை ஈர்க்கும். பழைய காலத்தின் கனவுக் கன்னியின் நவீன வடிவம்.

அஸ்டா நாய் (Skippy)

நிக்-நோரா விசாரணைகளில் துணையாக வரும் நாய். நகைச்சுவை கலந்த சேட்டைகள், எதிர்பாராத செயல்கள், முக்கியமான தருணங்களில் வழிகாட்டும் வேடம். சில நேரங்களில் அதற்கும் தனி கதையுண்டு!

தேடி வரும் குற்றங்கள்

நிக் சார்லஸ் ஓய்வெடுக்கச் செல்லும் இடம்தோறும் குற்றங்கள் அவரைத் தேடி வரும். ஒவ்வொரு கதையும் குடும்பம், இசை, விளையாட்டு போன்ற புதிய பின்னணியில் விரிகிறது. நிக், நோரா, அஸ்டா மூவரின் கலவையுடன் ஒவ்வொரு படமும் மகிழ்ச்சிகரமான திருப்பங்களால் நிறைந்திருக்கும். குற்றவாளிகள் ஒரே இடத்தில் சேரும் கிளைமாக்ஸ் காட்சிகள் மிகவும் பிரபலமானவை.

இவை சீரியஸான குற்றப் படங்கள் அல்ல — மெலிதான நகைச்சுவையுடன் நகரும் சஸ்பென்ஸ் கதைகள். ‘யார் இதைச் செய்திருக்கலாம்?’ என்ற கேள்வி இறுதி வரை ரசிகர்களை நெருக்கடியில் வைத்திருக்கும்.

முதல் மூன்று படங்களின் கதையை எழுதியவர் டேஷியல் ஹேமெட். திரைக்கதை எழுதிய ஆல்பர்ட் ஹேக்கட் மற்றும் பிரான்சஸ் குட்ரிச்சும் தம்பதியரே. அவர்களது இணைப்பு நிக்–நோரா கதாபாத்திரங்களில் இயல்பாக பிரதிபலித்தது. முதல் நான்கு படங்களையும் டபிள்யூ எஸ் வான் டைக் இயக்கியுள்ளார்.

Facebook Comments Box