கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய மேல்முறையீட்டு மனுவை அக்டோபர் 10ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
கரூரில் நடந்த கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டாம் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்தது. அந்த தீர்ப்பை எதிர்த்து பாஜக மூத்த தலைவர் உமா ஆனந்தன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த மனு தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், நீதிபதி கே. வினோத் சந்திரன் அடங்கிய அமர்வு வழக்கை ஆய்வு செய்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “சிபிஐ விசாரணை கோரிய மனுவை விசாரித்த உயர் நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகளில் ஒருவரே தற்போதைய விசாரணை திருப்திகரமாக இல்லை எனக் குறிப்பிட்டிருந்தார். இருந்தும் சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது” என கூறினார். இதையடுத்து வழக்கை அக்டோபர் 10-ம் தேதி விசாரிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
செப்டம்பர் 27 அன்று கரூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 2 வயது குழந்தை உட்பட 41 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, கூட்ட நெரிசல் சம்பவங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கவும், இழப்பீடு வழங்கவும் பல பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
மதுரை கிளை நீதிபதிகள் தண்டபாணி மற்றும் ஜோதிராமன் அமர்வில் இந்த மனுக்கள் விசாரிக்கப்பட்டு, “தற்போதைய நிலையில் சிபிஐ விசாரணை தேவையில்லை, போலீஸ் விசாரணை தொடக்க நிலையில் உள்ளது” எனக் கூறி மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்நிலையில், உமா ஆனந்தன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.