பிரசாந்த் கிஷோருடன் சிராக் பாஸ்வான் கூட்டணி? — பிஹார் அரசியலில் பரபரப்பு!

வரவிருக்கும் பிஹார் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, சிராக் பாஸ்வான் மற்றும் பிரசாந்த் கிஷோர் இடையே கூட்டணி அமைவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்குக் காரணமாக, “அரசியலில் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும்” என்று லோக் ஜனசக்தி கட்சி வட்டாரங்கள் சமீபத்தில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

பிஹாரின் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வானின் மகனான சிராக் பாஸ்வான், தற்போது அம்மாநில அரசியலில் முக்கிய செல்வாக்கு வாய்ந்த நபராக உள்ளார். 2020-ம் ஆண்டு பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் அவர் தனியாக போட்டியிட்டு நிதிஷ் குமார் தலைமையிலான ஜேடியு கட்சிக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தினார். சமீபத்திய 2024 மக்களவைத் தேர்தலிலும் அவர் போட்டியிட்ட 5 தொகுதிகளிலும் வெற்றி பெற்று தனது வலிமையை நிரூபித்தார். இதனால் லோக் ஜனசக்தி கட்சியின் தாக்கம் பிஹாரில் பெரிதும் உயர்ந்துள்ளது.

இந்நிலையில், சிராக் பாஸ்வானின் கட்சிக்கும், பிஹாரில் ஆளும் பாஜக-ஜேடியு கூட்டணிக்கும் இடையில் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. மொத்தம் 243 தொகுதிகள் உள்ள நிலையில், பாஸ்வான் கட்சி 40 இடங்களை கோருகிறது. ஆனால் பாஜக 25 இடங்களுக்கு மேல் வழங்க தயாராக இல்லையென கூறப்படுகிறது. இதனால் சிராக் பாஸ்வான் அதிருப்தியடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சூழலில், பாஸ்வான் தரப்பு பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஜன் சுராஜ் கட்சியுடன் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஜன் சுராஜ் கட்சி தனியாக போட்டியிடும் நிலையில், வெற்றி வாய்ப்பு குறைந்திருந்தாலும் கணிசமான வாக்குகளைப் பிரிக்கும் சக்தி கொண்டதாக அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன. எனவே வலுவான மாற்றுக் கூட்டணியை உருவாக்க பிரசாந்த் கிஷோர் முயற்சித்து வருகிறார்.

சிராக் பாஸ்வானும் சமீபத்தில் இதற்கு சைகை அளிக்கும் வகையில், “நான் காய்கறிகளில் உப்பைப் போன்றவன். ஒவ்வொரு தொகுதியிலும் 20,000 முதல் 25,000 வாக்குகளைப் பிரிக்க முடியும். எனவே கூட்டணியிலிருந்து வெளியேறும் வாய்ப்பு எப்போதும் எனக்குக் கிடைக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

சிராக் பாஸ்வானுக்கும் நிதிஷ் குமாருக்கும் இடையிலான உறவு எப்போதும் பதட்டமானதாக இருந்தது. எனவே தொகுதி பங்கீடு விவகாரத்தை முன்னிட்டு, பாஸ்வான் கடைசி நேரத்தில் கூட்டணியிலிருந்து விலகும் சாத்தியம் உள்ளதாக அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். அதே சமயம், அவர் பிரதமர் நரேந்திர மோடியின் விருப்பத்தை மீறமாட்டார் என்பதால், இது தொகுதி பேரத்தை உயர்த்தும் ஒரு தந்திரமாக இருக்கலாம் என்றும் பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன.

Facebook Comments Box