பும்ராவின் ‘வொர்க்லோடு’ மேலாண்மை குறித்து மனம் திறந்த சிராஜ்
இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவிற்கு வழங்கப்படும் ‘வொர்க்லோடு மேனேஜ்மென்ட்’ (Workload Management) குறித்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து இந்திய அணியின் மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.
பும்ரா, இவ்வாண்டின் தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் ஐந்தாவது போட்டியில் விளையாடியபோது முதுகில் காயம் அடைந்தார். பின்னர் அவர் அறுவை சிகிச்சை பெற்று, நீண்ட இடைவெளிக்குப் பிறகு இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகளில் மட்டுமே பங்கேற்றார்.
இந்த நிலையில், பும்ராவிற்கு ஓய்வு வழங்கப்பட்டதற்கான காரணத்தை விளக்கி சிராஜ் கூறியதாவது:
“வெளியில் இருந்து எழும் விமர்சன சப்தங்களை பும்ரா கவனிப்பதில்லை. அவருக்கு முதுகில் ஏற்பட்ட காயம் கடுமையானது. அதற்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னர் இந்திய அணி அவரை மிகுந்த கவனத்துடன் கையாள்கிறது.
அவரது உடல் நிலை முக்கியமானது, ஏனெனில் பும்ரா அணியின் முதுகெலும்பு. அணிக்கு அவர் தேவைப்படும் நேரத்தில் முழு திறனுடன் விளையாட வேண்டும் என்பதற்காகவே அவருக்கு சரியான ஓய்வு அளிக்கப்படுகிறது.
ஆசிய கோப்பை சமீபத்தில் முடிந்தது; அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பை, பின்னர் 2027-ல் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது. இத்தகைய பெரிய போட்டிகளில் பும்ரா இந்திய அணிக்குத் தவிர்க்க முடியாத வீரர். தன் தேசத்திற்காக முழு உறுதியுடன் விளையாடும் ஆர்வம் அவருக்கு உள்ளது. ஆனால் அவர் காயமடைந்திருக்கையில் எப்படி விளையாட முடியும் என்பதை ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும்,” என சிராஜ் தெரிவித்துள்ளார்.