கன்னட பிக்பாஸ் வீட்டுக்கு சீல் வைத்த அதிகாரிகள் — காரணம் என்ன?
சுற்றுச்சூழல் சட்ட மீறல்கள் காரணமாக, கன்னட பிக்பாஸ் சீசன் 12 நிகழ்ச்சி நடைபெற்று வந்த செட்டுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
விபரங்கள்:
‘பிக்பாஸ் கன்னடம் சீசன் 12’ தற்போது கலர்ஸ் கன்னடா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இதை நடிகர் கிச்சா சுதீப் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சிக்கான செட், பிடாடி தொழில்துறை பகுதியில் உள்ள ஜாலிவுட் ஸ்டுடியோஸ் அண்ட் அட்வென்ச்சர்ஸ் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
அண்மையில், அதிகாரிகள் அங்கு கழிவுநீர் மேலாண்மை தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர். அந்த நேரத்தில், செட் அமைந்திருந்த இடத்திலிருந்தே சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நேரடியாக வெளியேற்றப்பட்டு வந்தது கண்டறியப்பட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து, கஸ்தூரி கர்நாடக ஜனபர வேதிகே அமைப்பினர், “இப்படி சுற்றுச்சூழலைக் கெடுக்கும் நிகழ்ச்சியை நிறுத்த வேண்டும்” எனக் கோரி ஸ்டுடியோவுக்கு வெளியே போராட்டம் நடத்தினர்.
மேலும், பிளாஸ்டிக் கப்புகள், காகிதத் தட்டுகள் உள்ளிட்ட திடக்கழிவுகள் சரியான முறையில் அகற்றப்படவோ அல்லது பதிவுசெய்யப்படவோ இல்லை என்று கர்நாடக மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் (KSPCB) தெரிவித்துள்ளது. கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்படவில்லை என்றும், அதற்கான எந்தவிதமான உரிய நடைமுறையும் பின்பற்றப்படவில்லை என்றும் அதிகாரிகள் தங்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த காரணங்களால், சுற்றுச்சூழல் விதிமீறல்கள் செய்ததாகக் கூறி, பிக்பாஸ் செட்டில் அனைத்து படப்பிடிப்புகளையும் நிறுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதன் பேரில், அதிகாரிகள் செட்டுக்கு சீல் வைத்துள்ளனர். தற்போது, பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் போட்டியாளர்கள் விரைவில் வெளியேற்றப்படுவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.