பயோமெட்ரிக் ஆதென்டிகேஷன் மூலம் யுபிஐ பேமென்ட் — புதன்கிழமை அறிமுகம்!
இந்தியாவில் வரும் புதன்கிழமை (அக்டோபர் 8) முதல் பயோமெட்ரிக் ஆதென்டிகேஷன் முறையின் மூலம் யுபிஐ (UPI) பேமென்ட் செய்யும் புதிய அம்சம் அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விபரங்கள்:
இந்தியாவில் தற்போது யுபிஐ மூலமாக நொடிப்பொழுதில் பண பரிவர்த்தனைகள் நடைபெற்று வருகின்றன. கூகுள் பே, போன் பே, பேடிஎம், அமேசான் பே, BHIM போன்ற செயலிகள் மூலம், நகரம் முதல் கிராமம் வரை எல்லா தரப்பினரும் இதனைப் பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் ரொக்கப் பணத்தின் பயன்பாடு பெருமளவில் குறைந்துள்ளது.
யுபிஐ பரிவர்த்தனைகள் அதிகரித்து வரும் நிலையில், பயனர்களின் வசதியையும் பாதுகாப்பையும் மேம்படுத்தும் நோக்கில், புதிய பயோமெட்ரிக் ஆதென்டிகேஷன் அம்சம் அறிமுகப்படுத்தப்படுகிறது.
அதன்படி, அரசு வசமுள்ள ஆதார் சார்ந்த பயோமெட்ரிக் தரவுகள் பயன்படுத்தப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம், பயனர்கள் ஃபிங்கர்பிரிண்ட் அல்லது முகஅங்கீகாரம் (Facial Recognition) மூலம் யுபிஐ பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும்.
இப்போதைய முறையில் யுபிஐ பரிவர்த்தனைக்கு PIN எண் அவசியமாக உள்ளது. ஆனால், புதிய பயோமெட்ரிக் ஆதென்டிகேஷன் நடைமுறைக்கு வந்தவுடன், PIN இன்றி விரைவாகவும் பாதுகாப்பாகவும் பரிவர்த்தனை செய்வது சாத்தியமாகும்.
இந்த அம்சம் நடைமுறைக்கு வந்தவுடன், இந்தியாவின் டிஜிட்டல் பேமென்ட் துறையில் முக்கியமான மைல் கல் என நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர்.