இஸ்ரேல்–ஹமாஸ் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்: 20 அம்சத் திட்டத்தை முன்மொழிந்தார் டொனால்டு ட்ரம்ப்

இஸ்ரேல் அரசு மற்றும் ஹமாஸ் அமைப்புக்கிடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை எகிப்தின் ஷர்ம் எல் ஷேக் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2 ஆண்டுகளாக இஸ்ரேல் ராணுவம் மற்றும் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் குழுவினர் இடையே கடும் மோதல் நீடித்து வருகிறது. இந்த நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் 20 அம்சங்களைக் கொண்ட அமைதி திட்டத்தை முன்வைத்துள்ளார்.

அந்த திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

  • போரினால் சிதைந்த காசா பகுதி மீண்டும் கட்டியெழுப்பப்படும்.
  • அந்தப் பகுதியில் இருந்து தீவிரவாதம் முற்றிலும் அகற்றப்படும்.
  • ஹமாஸ் கைவசமுள்ள இஸ்ரேல் பிணைக்கைதிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்.
  • உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒப்படைக்கப்பட வேண்டும்.
  • போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டதும், இஸ்ரேல் ராணுவம் படிப்படியாக காசாவில் இருந்து வெளியேறும்.
  • ஹமாஸ் அமைப்பு ஆயுதங்களை கைவிட்டு பொது மன்னிப்பு பெறலாம்.
  • அவர்கள் விரும்பினால் வெளிநாடுகளில் பாதுகாப்பாக குடியேற அனுமதிக்கப்படும்.
  • காசாவை நிர்வகிக்க உள்ளூர் தலைவர்கள் அடங்கிய புதிய நிர்வாக குழு அமைக்கப்படும். இதில் ஹமாஸ் தலைவர்களுக்கு இடமில்லை.
  • இந்த புதிய நிர்வாகம் ட்ரம்ப், பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் உள்ளிட்ட சர்வதேச குழுவின் வழிகாட்டுதலின் கீழ் செயல்படும்.
  • காசாவில் சிறப்பு பொருளாதார மண்டலம் உருவாக்கப்பட்டு, சர்வதேச முதலீடுகள் ஊக்குவிக்கப்படும்.
  • வேலைவாய்ப்புகள் அதிகரிக்கப்படும்.
  • “ஐஎஸ்எப்” என்ற சர்வதேச அமைதி படை காசா பகுதியில் பாதுகாப்புப் பொறுப்பை ஏற்கும்.

இந்த அமைதி முயற்சியின் ஒரு பகுதியாக, இஸ்ரேல் அரசின் மூத்த அமைச்சர் ரோன் டெர்மர் தலைமையிலான குழுவும், ஹமாஸ் தலைவரான காலில் அல் ஹையா தலைமையிலான குழுவும் நேருக்கு நேர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மருமகனும் ஆலோசகருமான ஜெராட் குஷ்னர் மற்றும் அமெரிக்க சிறப்பு தூதர் விட்காப் ஆகியோர் அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் பங்கேற்க உள்ளனர்.

அமெரிக்க அரசு வட்டாரங்கள் தெரிவித்ததாவது:

“இஸ்ரேல்–ஹமாஸ் இடையிலான பேச்சுவார்த்தை முன்னேற்றம் அடைந்துள்ளது. ஹமாஸ் பிடியில் உள்ள இஸ்ரேல் பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டு, உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டவுடன் உடனடியாக போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகும்,” என தெரிவித்தன.

Facebook Comments Box