அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸை சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியல் நோபல் பரிசு
அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸை சேர்ந்த மூன்று விஞ்ஞானிகளுக்கு இந்த ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி மற்றும் பொருளாதாரம் போன்ற துறைகளில் சாதனை படைப்போருக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. மருத்துவ நோபல் பரிசு நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.
இதன்பிறகு, இயற்பியலுக்கான நோபல் பரிசு விவரங்களை ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்சஸ் அமைப்பு, ஸ்டாக்ஹோமில் (சுவீடன்) வெளியிட்டது. அமெரிக்காவை சேர்ந்த ஜான் எம். மார்டினிஸ், பிரிட்டனை சேர்ந்த ஜான் கிளார்க், பிரான்ஸை சேர்ந்த மைக்கேல் டெவோரெட் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மூவரும் தற்போது அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார்கள். குவாண்டம் ஊடுருவல் குறித்த ஆய்வுக்காக அவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
ஒரு பந்தை சுவரில் எறிந்தால் அது திரும்பி வரும் என்பதில் அனைவருக்கும் தெரிந்த இயற்பியல் விதி உள்ளது. ஆனால் சில நுண்ணிய துகள்கள் சுவரை துளைத்து மறுபக்கத்திற்கு செல்கின்றன. இதுவே குவாண்டம் ஊடுருவல் என அழைக்கப்படுகிறது. 1984 மற்றும் 1985-ம் ஆண்டுகளில் மூவரும் குவாண்டம் ஊடுருவலை அறிவியல்பூர்வமாக நிரூபித்தனர்.
இந்த சாதனையின் பேரில் அவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. குவாண்டம் ஊடுருவல் தொழில்நுட்பம் மருத்துவம், விண்வெளி, பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் மற்றும் சூப்பர் கம்ப்யூட்டர் தயாரிப்பு போன்ற பல துறைகளில் பயன்படுத்தப்படுகிறது.