வடலூர் சத்திய ஞான சபையில் நடிகர் சிம்பு வழிபாடு

வடலூர் சத்திய ஞான சபையில் நடிகர் சிலம்பரசன் வழிபட்டு, தியானம் செய்தார். கடலூர் மாவட்டம், வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய இந்த சத்திய ஞான சபையில் ஆண்டுதோறும் தைப்பூச ஜோதி தரிசனம் விமர்சையாக நடைபெறுவது வழக்கம். மாத ஜோதி தரிசனமும் நடைபெறும். தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் பல்வேறு நாடுகளிலிருந்தும் ஏராளமான சன்மார்க்க அன்பர்கள் ஜோதி தரிசனம் செய்வர்.

இங்குள்ள தருமசாலையின் அணையா அடுப்பு இன்று வரை பலரின் பசியைப் போக்கி வருகிறது. தினமும் மூன்று வேளை சமைக்கப்பட்டு அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்த நிலையில், நடிகர் சிலம்பரசன் நேற்று காலை வடலூர் சத்திய ஞான சபைக்கு வருகை தந்தார்.

சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தியானம் செய்தார். சத்திய தருமசாலை மற்றும் அணையா அடுப்பு பகுதிகளுக்கு சென்று பார்த்தார். தொடர்ந்து, வள்ளலார் சித்திபெற்ற மேட்டுக் குப்பத்தில் உள்ள திருவறை தரிசனம் மற்றும் வள்ளலார் தண்ணீரை விளக்கு எரியச் செய்த நற்கருங்குழி பகுதிகளுக்கு சென்று வழிபாடு செய்தார்.

“நானும் சைவமே!”

சிலம்பரசன் கூறியதாவது: “ஏழை எளிய ஆதரவற்றோரின் பசியைக் போக்கும் வள்ளலார் போல, நானும் அனைவருக்கும் அன்னதானம் செய்ய விரும்புகிறேன். நான் சைவம் தான். அதனால் தான் வள்ளலார் அழைத்த உடன் வடலூர் சத்திய ஞானசபைக்கு வந்து வள்ளலார் சுவாமியை வழிபட்டேன்.”

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு அக்டோபர் 7-ம் தேதி காலை வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்தது. இப்படத்தின் பெயர் ‘அரசன்’ ஆக வெளியான நாளில், வடலூர் வள்ளலார் சத்திய ஞானசபையில் நடிகர் சிம்பு தியானம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, நேற்று முன்தினம் இரவு சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கும் அவர் தரிசனம் செய்தார்

Facebook Comments Box