டெல்லி – கொல்கத்தா நெடுஞ்சாலையில் கடும் நெரிசல்: பிஹாரில் 4 நாட்களாக சிக்கித் தவிக்கும் வாகனங்கள்
பிஹார் மாநிலம் ரோட்டாஸ் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் ஆறுகள் நிரம்பி வழிந்துள்ளன. இதன் காரணமாக தேசிய நெடுஞ்சாலை 19 பல இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால் டெல்லி – கொல்கத்தாவை இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
ரோட்டாஸ் மாவட்டம் முதல் அவுரங்காபாத் வரை சுமார் 65 கிலோமீட்டர் தூரம் வாகனங்கள் மிக மெதுவாக நகர்கின்றன. சில கிலோமீட்டர் தூரம் கடக்கவே பல மணி நேரம் ஆகிறது. இதனால் பல வாகனங்கள் கடந்த 4 நாட்களாக நெரிசலில் சிக்கி அசைந்துகொள்ள முடியாமல் தவிக்கின்றன.
இந்நிலையில், லாரிகளில் ஏற்றப்பட்டுள்ள பழங்கள், காய்கறிகள், பால் உள்ளிட்ட அழுகக்கூடிய பொருட்கள் சேதமடையும் அபாயம் உருவாகியுள்ளது. இதன் விளைவாக வணிகம் கடுமையாக பாதிக்கப்படும் என கூறப்படுகிறது. மேலும், ஆம்புலன்ஸ், அத்தியாவசிய சேவைகள் மற்றும் சுற்றுலா பயணிகளும் நெரிசலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து லாரி ஓட்டுநர் பிரவீன் சிங் தெரிவித்ததாவது: “கடந்த 30 மணி நேரமாக பயணத்தில் இருக்கிறோம், ஆனால் இதுவரை 7 கிலோமீட்டர் தூரம் மட்டுமே கடந்துள்ளோம். போக்குவரத்து நெரிசலை சரி செய்ய அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை,” என்றார்.